ஆசியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் விளையாட்டு

முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடம் இந்தியா பரிதாப தோல்வி

இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
 
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
 
முதல் ஒருநாள் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 288 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய க்வாஜா, மார்ஷ், ஹாண்ட்ஸ்கோம்ப் ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தினர்.
 
இதனையடுத்து 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே சோகமாக அமைந்தது.
 
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக கருதப்பட்ட தவான், கோஹ்லி, ராயுடு, ஆகியோர் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததனர்.
 
இதனால் இந்திய அணி 4 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து களமிறங்கிய தோனி, ரோஹித் சர்மாவுடன் இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். இருவரும் 4-வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த நிலையில் தோனி ஆட்டமிழந்தார்.
 
பின்னர் வந்த தினேஷ் கார்த்தி 12 ரன்களிலும், ஜடேஜா 8 ரன்களிலும் பெவிலியன் திரும்பினர்.
 
ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் அதிரடி காட்டிய ரோகித் சர்மா சதம் விளாசினார். சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அவர் அடிக்கும் 22-வது சதம் இதுவாகும்.
 
ரோகித் சர்மா 133 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்ததால் இந்திய அணியின் தோல்வி உறுதியானது. இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 254 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.
 
இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி 34ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. அசத்தலாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆஸ்திரேலிய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஜய் ரிச்சர்ட்ஸன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி 15-ம் தேதி நடைபெற உள்ளது.

பகிர்வுக்கு

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.