அரசியல் சட்டம் தமிழ்நாடு

கொடநாடு தொடர் 5 மரணம் ஆவணப்படம் வெளியிட்ட செய்தியாளர் மேத்யூஸ் மீது வழக்கு 

கொடநாடு வீடியோ விவகாரத்தில் மேத்யூஸ் உட்பட வீடியோவில் பேசிய அனைவர் மீதும் சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
 
ஜெயலலிதா மறைவுக்குப் பின், கொடநாடு எஸ்டேட்டில் நடந்த காவலாளி கொலை மற்றும் கொள்ளை விவகாரம், பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
 
அதில் கைது செய்யப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ், விபத்தில் உயிரிழந்தார். மற்றொரு முக்கியக் குற்றவாளி சயான், கேரளாவில் தனது குடும்பத்தோடு காரில் செல்லும்போது, விபத்துக்கு உள்ளானதில், அவரின் மனைவி விஷ்ணுப்ரியா, மகள் நீத்து ஆகியோர் உயிரிழந்தனர். சயான் உயிர் பிழைத்தார்.
 
இவர்களைத் தவிர்த்து, கொடநாடு எஸ்டேட்டின் சிசிடிவி பராமரிப்பாளராக இருந்த தினேஷ் குமார், தற்கொலை செய்து கொண்டார்.
 
அடுத்தடுத்து நடந்த இந்த மர்ம மரணங்களின் பின்னணியில் யார் இருக்கிறார் என்பது பெரும் கேள்விக்குறியாக இருந்தது.
 
இதற்கிடையே கொள்ளை, கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட சயான் மற்றும் கேரளாவை சேர்ந்த தீபு, சதீசன், உதயகுமார், குட்டி பிஜின், வாளையார் மனோஜ் சாமியார், வயநாட்டை சேர்ந்த மனோஜ், சந்தோஷ் சாமி, ஜம்சீர் அலி, ஜிதின் ராய் ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
 
இந்நிலையில், பல மாதங்களாக வாய் திறக்க மறுத்து வந்த சயான், தற்போது தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மாத்யூ சாமுவேலிடம் அளித்துள்ள வீடியோ வாக்குமூலத்தில், இந்தச் சம்பவங்களின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறியுள்ளார்.
 
இந்த வீடியோ ஆவணம், எதிர்வரும் தேர்தலிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. அதனால், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன.
கொடநாடு எஸ்டேட் தொடர்பான ஆவணப்படத்தை நேற்று டெல்லி பிரஸ் கிளப்பில் தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் வெளியிட்டார்.
 
இந்நிலையில் கொடநாடு கொலை, கொள்ளை பற்றி வீடியோ வெளியிட்ட செய்தியாளர் மேத்யூஸ் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் மீது தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
ஆவணப்படத்தில் பேட்டியளித்த சயன் மனோஜ் ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பகிர்வுக்கு

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.