அரசியல் கருத்துக்கள் தேசியம்

மத்திய அரசின் முடிவை ஏற்க மறுத்து சி.பி.ஐ. இயக்குனராக இருந்த அலோக் வர்மா அதிரடியாக ராஜினாமா

சி.பி.ஐ.-மத்திய அரசு இடையேயான மோதலில் அதிரடி திருப்பமாக, அலோக் வர்மா புதிய பதவியை ஏற்க மறுத்ததோடு, பணியில் இருந்து ராஜினாமா செய்துவிட்டார்.
 
மத்திய புலனாய்வு துறை (சி.பி.ஐ.) இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா இருவரும், ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி மோதிக்கொண்டனர்.
 
இதனால் கடந்த அக்டோபர் மாதம் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். பின்னர் சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.
 
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து அலோக் வர்மா, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது செல்லாது என கடந்த 8-ந் தேதி தீர்ப்பளித்தனர்.
 
அத்துடன் நாகேஸ்வர ராவின் நியமனமும் ரத்து செய்யப்பட்டது.
எனவே அலோக் வர்மா கடந்த 9-ந் தேதி சி.பி.ஐ. இயக்குனராக மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்டார்.
 
இதைத்தொடர்ந்து அலோக் வர்மா விவகாரத்தில் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் வழங்கிய அறிக்கை தொடர்பாக, பிரதமர் மோடி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியின் பிரதிநிதியான நீதிபதி ஏ.கே.சிக்ரி ஆகியோரை கொண்ட தேர்வுக்குழு கூடி ஆலோசனை நடத்தியது.
 
இந்த கூட்டத்தின் முடிவில் சி.பி.ஐ. இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா நேற்று முன்தினம் அதிரடியாக நீக்கப்பட்டார். அவரது நீக்கத்துக்கு பிரதமர் மோடியும், ஏ.கே.சிக்ரியும் ஆதரவு அளித்த நிலையில், மல்லிகார்ஜுன கார்கே மட்டும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
 
பதவி நீக்கம் செய்யப்பட்ட அலோக் வர்மாவுக்கு பதிலாக நாகேஸ்வர ராவ், மீண்டும் சி.பி.ஐ.யின் இடைக்கால இயக்குனராக நியமிக்கப்பட்டார். அதன்படி அவர் நேற்று முன்தினம் இரவே மீண்டும் பதவி ஏற்றுக்கொண்டார்.
 
பின்னர் அலோக் வர்மாவை தீயணைப்பு, சிவில் பாதுகாப்பு மற்றும் ஊர்க்காவல்படை இயக்குனராக மத்திய அரசு நியமித்தது. ஆனால் இந்த புதிய பதவியை ஏற்க மறுத்த அலோக் வர்மா, நேற்று திடீரென ராஜினாமா செய்தார்.
 
இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை செயலாளருக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்தார்.
 
அதில் அவர் கூறுகையில், “என்னுடைய பணிக்காலம் கடந்த 2017 ஜூலை 31-ந் தேதியுடன் முடிவடைந்தது. எனினும் 2019-ம் ஆண்டு ஜனவரி 31-ந் தேதி வரை சி.பி.ஐ. இயக்குனராக மட்டுமே பணி நீட்டிக்கப்பட்டது. தற்போது அது இல்லாத நிலையில் தீயணைப்பு துறைத்தலைவருக்கான வயது வரம்பு கடந்து விட்டது. எனவே இன்று (நேற்று) முதல் நான் ஓய்வு பெற்றதாக கருதப்பட வேண்டும்” எனக்கூறி இருந்தார்.
 
இதைப்போல தனது பதவி நீக்கம் தொடர்பாக மோடி அரசு மீதும் அவர் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். அதில் அவர் “சி.பி.ஐ. விசாரணையின் கீழ் இருக்கும் ஒருவர் கூறிய குற்றச்சாட்டின் பேரில் தயாரிக்கப்பட்ட ஊழல் கண்காணிப்பு ஆணைய அறிக்கை தொடர்பாக என்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் இதில் எனது தரப்பு விளக்கத்தை கூற தேர்வுக்குழு வாய்ப்பு அளிக்கவில்லை. இயற்கை நீதிக்கு ஊறு விளைவிக்கப்பட்டு இருப்பதுடன், ஒட்டுமொத்த நடைமுறையும் தலைகீழாக்கப்பட்டு இருக்கிறது. கூட்டாக சுயபரிசோதனை செய்ய வேண்டிய தருணம் இது” என்று தெரிவித்தார்.
 
முன்னதாக நேற்று முன்தினம் அவர் வெளியிட்ட அறிக்கையில், “உயர் பதவி வகிப்போருக்கு எதிரான ஊழலை விசாரித்து வரும் அமைப்பு என்ற முறையில், வெளித்தலையீடு எதுவும் இன்றி சி.பி.ஐ. செயல்பட வேண்டும்.
 
சி.பி.ஐ.யின் கண்ணியத்தை குலைப்பதற்கு நடந்த முயற்சிகள் எதுவும் அதை தாக்காமல் நான் பார்த்துக்கொண்டேன். ஆனால் தனக்கே பகையாளியாக இருக்கும் ஒரேயொருவரின் அற்பமான, தவறான, ஆதாரமற்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பதவி நீக்கம் செய்யப்பட்டு உள்ளேன்” என்று கூறப்பட்டு இருந்தது.
 
இதற்கிடையே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த 9-ந் தேதி மீண்டும் பொறுப்பேற்றுக்கொண்ட அலோக் வர்மா, சில அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்திருந்தார்.
 
மேலும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான வழக்கு விசாரணைக்காக சிறப்பு அதிகாரி ஒருவரையும் நியமித்தார். ஆனால் இந்த பணியிடமாற்றம் மற்றும் நியமனங்களை இடைக்கால இயக்குனராக பொறுப்பேற்ற நாகேஸ்வர ராவ் நேற்று ரத்து செய்தார்.
 
மேலும் சி.பி.ஐ. அமைப்பில் கடந்த 8-ந் தேதி இருந்த நிலைமையே மீண்டும் பின்பற்றப்படும் என அறிவித்து உள்ளார். இது தொடர்பான உத்தரவுகளை அவர் பிறப்பித்தார்.
 
இதன் இடையேகட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா, தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட லஞ்ச வழக்கை ரத்து செய்யுமாறு, டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.
 
ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய மறுத்த நீதிபதி, இது குறித்து 10 வாரங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என நேற்று உத்தரவிட்டார்.
 
இதனால் மத்திய மோடி அரசின் செல்ல பிள்ளையாக கருதப்பட்ட ராகேஷ் அஸ்தானாவுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

பகிர்வுக்கு

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.