கேளிக்கை சினிமா

தன் செயலால் ரசிகர்கள், சினிமா உலகினர் பாராட்டுக்களை பெற்ற நடிகை சாய் பல்லவி

தான் நடித்த படம் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியதால் தன்னுடைய சம்பளப் பணத்தின் பாதியை நடிகை சாய் பல்லவி விட்டுக் கொடுத்து பட உலகினர் பாராட்டுக்களைப் பெற்றுள்ளார்.

‘பிரேமம்’ படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இந்தப் படத்தில் மலர் டீச்சராக வந்து அனைத்து ரசிகர்களின் இதயங்களிலும் இடம்பிடித்தார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

அண்மையில் தமிழில் சாய் பல்லவி-தனுஷ் நடிப்பில் வெளியான படம் ‘மாரி 2’. இப்படத்தில் சாய் பல்லவியின் நடிப்பு, குறிப்பாக ‘ரவுடி பேபி’ பாடல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சாய் பல்லவியின் நடனத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்தது.

இந்த நிலையில் தெலுங்கில் ஹனுராகவபுடி இயக்கத்தில் ஷர்வானத் – சாய்பல்லவி நடித்த ‘படி படி லேச்சு மனசு’ என்ற தெலுங்கு படம் கடந்த டிசம்பரில் திரைக்கு வந்தது. ஆந்திராவில் அதிகமான தியேட்டர்களில் திரையிட்டனர்.

இப்படம் ரூ.22 கோடிக்கு வியாபாரமாகி ரூ.8 கோடி மட்டுமே வசூலானதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு பெரிய நஷ்டம் ஏற்பட்டது. இந்த படத்துக்கு சாய்பல்லவிக்கு பேசிய சம்பளத்தில் ஒரு தொகையை படப்பிடிப்பின்போது தயாரிப்பாளர் முன்பணமாக கொடுத்து இருந்தார். படம் வெளியான பிறகு தயாரிப்பாளர் மீதம் ரூ. 40 லட்சத்தை கொடுக்க முன்வந்த போது நடிகை சாய்பல்லவி வேண்டாம் என கூறிவிட்டாராம்.

உங்கள் நஷ்டத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன் என்றாராம். ஆனாலும், படத் தயாரிப்பாளர் சாய்பல்லவியின் பெற்றோரிடம் அந்தப் பணத்தை கொடுக்க முயற்சித்த போது அவர்களும் வாங்க மறுத்து விட்டனர். முன்னணி நடிகர்களே செய்யத் தயங்கும் இந்தமாதிரியான காரியத்தை நடிகை சாய் பல்லவி செய்ததைப் பார்த்து பலரும் பாராட்டியுள்ளனர்.

பகிர்வுக்கு

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.