உச்ச நீதிமன்றம் சுற்றுச்சூழல் தமிழ்நாடு தொழில்கள்

ஜனவரி 8 அன்று தமிழக அரசின் மனுவும் ஸ்டெர்லைட் மனுவும் விசாரனைக்கு ஏற்றது உச்சநீதிமன்றம்

அரசின் மேல்முறையீட்டு மனுவும், ஆலை நிர்வாகத்தின் மனுவும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

முன்னதாக ஸ்டெர்லைட் செயல்பட தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளித்ததை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கியுள்ள உத்தரவை ரத்து செய்யக்கோரி வேதாந்தா நிறுவனத்தின் சார்பாக தாக்கல் செய்துள்ள மேல்முறையீடு மனுவை வரும் 8ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து, ஆலை எதிர்ப்பாளர் பாத்திமா தரப்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்தது. அதில், “ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த பாத்திமாவின் மனுவுக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் மற்றும் வேதாந்தா நிறுவன குழும இயக்குநர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது.

மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் திட்டம் உள்ளதா எனவும் தமிழக அரசு பதில் மனுவில் தெளிவுப்படுத்த வேண்டும் என உத்தரவிட்ட நீதிமன்றம், ஜனவரி 21ம் தேதிக்கு அடுத்த விசாரணையை ஒத்திவைத்து

அதுவரை ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவிற்கு எதிராக வேதாந்தா நிறுவனத்தின் சார்பாக வழக்கறிஞர் ரோகினி மூசா கடந்த மாதம் 24ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், ஸ்டெர்லைட் தொடர்பான வழக்கை தேசிய பசுமை தீர்ப்பாயம் தீர விசாரித்த பின்னர்தான் ஆலையை மீண்டும் திறக்கலாம் என தீர்ப்பு வழங்கியது.

இதற்கிடையே, உயர் நீதிமன்றம் ஜனவரி 21ம் தேதி வரை ஆலையை திறக்க தடை விதித்துள்ளது. இதில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உண்டு. அதனால், இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

இந்நிலையில், வேதாந்தா நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு முன்னிலையில் நேற்று ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்தார். அதில்,”ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவிற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்ற தலைமை நீதிபதி, வரும் 8ம் தேதியன்று வழக்கு விசாரணையை மேற்கொள்வதாக அறிவித்தார். இந்நிலையில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவும், ஆலை நிர்வாகத்தின் மனுவும் ஒன்றாக சேர்த்து விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.

பகிர்வுக்கு

ஸ்பெல்கோ
ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் சமூகத்தின் மேம்பாடு வேண்டி திறந்த மனதுடன் உண்மையை தேடி விரும்பும் எழுத்தாளர்களின் சங்கம கூடலே splco.me. இது சமூக வலைதளத்தின் எழுத்தாளர்களின் கன்னி முயற்சியின் தொகுப்பு.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of