ஆந்திரா தேசியம் தொழில்கள் வர்த்தகம்

வர்த்தகம் நடத்த உகந்த மாநிலங்களின் பட்டியலில் ஆந்திரா முதலிடம் ஆய்வில் தகவல்

இந்திய மாநிலங்களில் வர்த்தகம் நடத்த உகந்த மாநிலங்களின் பட்டியலை சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது.
 
ஆசிய தேர்வு மையக் கழகத்தின் கீழ் இயங்கும் டென்கீ பொது நல கல்லூரி மாணவர்கள் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் தலைமையில் இந்திய மாநிலங்களில் வர்த்தகம் நடத்த உகந்த மாநிலம் குறித்த ஆய்வு நடத்தினார்கள்.இந்த ஆய்வில் பணியாளர்கள் கிடைத்தல், வெளிநாட்டு முதலீடுகள், முன்னேற்றம் மற்றும் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. 
 
 
இந்த ஆய்வின் முடிவில் வர்த்தகம் நடத்த மிகவும் உகந்த மாநிலமாக ஆந்திரப் பிரதேச மாநிலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தில் மகாராஷ்டிராவும், மூன்றாவதாக டெல்லியும் உள்ளன.
 
இதையடுத்து சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்துக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து பேசிய சந்திரபாபு நாயுடு, சர்வதேச முதலீட்டாளர்கள் இடையில் ஆந்திரப் பிரதேசம் நல்ல பெயரை பெறுவதில் அரசு முழு கவனமும் செலுத்தி வருகிறது என்று கூறியுள்ளார்.
 
ஆந்திராவில் சமீபத்தில் அனைத்து இல்லங்களுக்கு ஸ்மார்ட் போன் வழங்கப் போவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கான சுமார் 1.4 கோடி ஸ்மார்ட் போன்கள் ஆந்திர மாநிலத்திற்குள்ளேயே உற்பத்தி செய்யப்பட உள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஜூலை மாதம் மத்திய நிறுவன கொள்கை மற்றும் மேம்பாட்டு துறையும், உலக வங்கியும் இணைந்து வெளியிட்ட தொழில் புரிய உகந்த மாநிலங்களின் பட்டியலிலும் ஆந்திரா முதலிடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

பகிர்வுக்கு

ஸ்பெஷல் கரெஸ்பாண்டெண்ட் - ஸ்பெல்கோ
ஸ்ப்ல்கோ மீடியாவின் செய்தி பகுப்பாய்வு பிரிவு

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of