அலோக் வர்மா விடுவிக்கப்பட்டது குறித்து டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சந்தேகங்களை முன்வைத்துள்ளார். சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா இடையேயான மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவர்கள் இருவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

இணை இயக்குநர் நாகேஸ்வர் ராவை தற்காலிகமாக சிபிஐ இயக்குநராக நியமித்து மத்திய அரசு நள்ளிரவு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல், சிபிஐ அதிகாரிகள் 14 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், அலோக் வர்மா கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டது சந்தேகத்தை கிளப்புவதாக அரவிந்த் கெஜ்ரிவால் புது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ரபேல் ஊழல் விவகாரத்தை அலோக் வர்மா விசாரிக்கவிருந்த நிலையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளது சந்தேகத்தை கிளப்புவதாக கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பதிவுகளில் எழுப்பிய கேள்விகளின் விவரம் பின்வருமாறு :

“ சிபிஐ இயக்குநர் விடுப்பில் அனுப்ப பட்டதற்கான காரணம் என்ன லோக்பால் சட்டத்தின் படி நியமனம் செய்யப்பட்ட விசாரணை அதிகாரி ஒருவரை எந்த சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் அதிகாரத்தை மோடி அரசு பெற்றது? இதன்மூலம் மோடி அரசு மறைக்க நினைப்பது என்ன? அலோக் வர்மா விடுவிக்கப்பட்டதற்கும், ரபேல் ஒப்பந்தத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? அலோக் வர்மா ரபேல் விவகாரத்தில் விசாரணையை துவங்க இருந்தது, மோடிக்கு பிரச்சினையாக இருந்திருக்குமோ?”

இவ்வாறு கெஜ்ரிவால் பகீர் கேள்விகளை முன் வைத்துள்ளதால் டெல்லி அரசியல் பரப்பரப்பாகி உள்ளது