5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என்று ஒன்றிய அரசு கூறிய 5ஜி அலைக்கற்றை, வெறும் 1.50 லட்சம் கோடிக்குத்தான் ஏலம் விடப்பட்டுள்ளது. இது யாருக்காக செய்யப்பட்டது? எவ்வளவு மோசடி நடந்துள்ளது? என திமுக எம்.பி. ஆ.ராசா கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்தியாவில் தொலைத் தொடர்பு துறையில் தற்போது 4ஜி அலைக்கற்றை சேவை பயன்பாட்டில் உள்ளது. இதன் அடுத்தகட்டமாக 5ஜி அலைக்கற்றை சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது பயன்பாட்டுக்கு வந்தால் செல்போன்களின் இணையதள வேகம் 10 மடங்கு அதிகமாக இருக்கும்.

தானாக இயங்கும் கார், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் உருவாகி வரும் சூழலில், 5ஜி சேவைக்கான தேவை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சேவை முக்கிய நகரங்களில் வரும் அக்டோபரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவின் அதிவேக 5ஜி அலைக்கற்றை ஏலம் விடும் பணி ஜூலை மாதம் 26 ஆம் தேதி தொடங்கியது. இதில் 20 ஆண்டுகளுக்கு10 பேண்ட்களில் 72,098 மெகாஹெர்ட்ஸ் (72 ஜிகாஹெர்ட்ஸ்) அலைக்கற்றையை ஏலம் விட தொலைத் தொடர்பு துறை முடிவு செய்தது.

இதன் அடிப்படை மதிப்பு ரூ.4.3 லட்சம் கோடி ஆகும். 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட் வொர்க்ஸ் ஆகிய 4 நிறுவனங்கள் பங்கேற்றன. ஒருவாரமாக நடைபெற்று முடிந்த ஏலத்தில், முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் அதிக அளவிலான அலைக்கற்றையை ஏலம் எடுத்துள்ளது.

இதுகுறித்து ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “1 லட்சத்து 50 ஆயிரத்து 173 கோடி ரூபாய்க்கு 5ஜி அலைக்கற்றை உரிமம் விற்கப்பட்டுள்ளது. அரசு ஏலம் விட்டுள்ள 72,098 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையில் 51.236 மெகாஹெர்ட்ஸ் (71%) ரூ. 1,50,173 கோடிக்கு விற்பனையானது.

இதில் அதானி டேட்டா நெட்ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் 400 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது. பார்த்தி ஏர்டெல் லிமிடெட் நிறுவனம் 19,867.8 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது.

ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட் 24,740 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது. வோடபோன் ஐடியா லிமிடெட் 6,228 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது. இதன்மூலமாக அனைத்து பங்கேற்பாளர்களால் வழங்கப்படவுள்ள வருடாந்திர தவணைத் தொகை ரூ.13,365 கோடியாகும்.

மேலும், 5ஜி அலைவரிசையை நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பணி ஆகஸ்டு 10 ஆம் தேதி நடைபெறும், அக்டோபர் மாதத்தில் 5ஜி சேவைகள் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த திமுக எம்.பி. ஆ.ராசா குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆ.ராசா, “ரூ.5 லட்சம் கோடிக்கு சென்றிருக்க வேண்டிய 5ஜி ஏலம், ரூ.1.50 லட்சம் கோடிக்குதான் சென்றுள்ளது. என்று ஒன்றிய அரசு தான் பதிலளிக்க வேண்டும்.

5ஜி அலைக்கற்றை 5 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏலம் போகும் என்று ஒன்றிய அரசு தான் கூறியது. ஆனால், ரூ.1.50 கோடிக்குத்தான் சென்றுள்ளது. எஞ்சிய பணம் எங்கே சென்றது? இது யாருக்காக செய்யப்பட்டது? எவ்வளவு மோசடி நடந்துள்ளது?

வெறும் 30மெகா ஹெர்ட்ஸ் 2ஜி அலைக்கற்றையை டிராயின் பரிந்துரைப்படி கொடுத்தபோது, ரூ.1.76கோடி நஷ்டம் என அன்றைக்கு இருந்த தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத்ராய் ரிப்போர்ட் கொடுத்தார். அது ஆட்சியை கவிழ்க்க நடந்த சதி.

அன்றைக்கு ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதற்காக அன்று வினோத்ராய் என்ற தனிமனிதரை பயன்படுத்தி, அவர் வசமிருந்து சிஏஜி என்ற அரசியல் சட்ட அமைப்பை பயன்படுத்தி அவருக்கு பின்னால் இருந்தவர்கள் 2ஜி அலைக்கற்றை ஏலம் தொடர்பாக மிகப்பெரிய சதிவலையை தீட்டினார்கள். இதுகுறித்து என்னுடைய புத்தகத்திலும் எழுதியுள்ளேன். ஆனால், இதுவரை வினோத்ராயிடம் இருந்து எந்த பதிலும் இல்லை

இன்றைக்கு இவர்கள் ஏலம் விட்டிருப்பது 51ஜிகா ஹெர்ட்ஸ். அதாவது மெகா ஹெர்ட்ஸைவிட, ஜிகா ஹெர்ட்ஷின் திறனும் அளவும் 20 மடங்கு அதிகம். அதன்படி 5ஜி ஏலம் 5 அல்லது 6 லட்சம் கோடிக்கு போயிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செல்லவில்லை.

51 ஜிகா ஹெட்ஸ் கொண்ட 5ஜி அலைக்கற்றை குறைவான தொகைக்கு விற்கப்பட்டு மிக பெரிய மோசடி நடந்துள்ளது. இது திட்டமிடுதல் தவறா அல்லது நான்கைந்து கம்பெனிகளுடன் இணைந்து ஒன்றிய அரசு மோசடி செய்ததா என்பதை விசாரணை நடத்த வேண்டும்.

இது யாருக்காக செய்யப்பட்டது? எவ்வளவு மோசடி நடந்துள்ளது? என இந்த அரசு விசாரிக்க வேண்டும். இல்லையென்றால் இப்போதைய அரசு தூக்கி எறியப்பட்டு, புதிய அரசு அமைந்தவுடன் விசாரணை நடத்த வேண்டும்” என ஆ.ராசா கண்டனக் குரல் எழுப்பி உள்ளார்.