கடந்த 3 ஆண்டுகளில் சிஆர்பிஎப், பிஎஸ்எப் போன்ற மத்திய ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த மொத்தம் 436 பேர் தற்கொலை செய்து கொண்டதாக ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ம் தேதி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் தொடங்கியது. அதன்பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில், எதிர்க்கட்சிகளின் கூச்சல் குழப்பத்துடன் பிப்ரவரி 13ஆம் தேதியுடன் முதல் அமர்வு நிறைவுபெற்றது.

இதனையடுத்து கடந்த 13.03.2023 அன்று தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் 2வது அமர்வு, ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பட்ஜெட் மீதான மானியக் கோரிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட உள்ளது. மாநிலங்களவையில் 26 மசோதாக்கள், மக்களவையில் 9 மசோதாக்கள் என 35 மசோதாக்களை நிறைவேற்ற ஒன்றியஅரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமான கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், 2022ல் மத்திய ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த 135 பேர், 2021ல் 157 பேர், 2020ல் 144 பேர் என மொத்தம் 436 பேர் தற்கொலை செய்து கொண்டதாக பதிலளித்துள்ளார்..

மேலும், மத்திய ஆயுதக் காவல் படையைச் சேர்ந்த சிஆர்பிஎப், பிஎஸ்எப், சிஐஎஸ்எப், ஐடிபிபி, எஸ்எஸ்பி, என்எஸ்ஜி மற்றும் அசாம் ரைபிள்ஸ் போன்றவற்றில் நடக்கும் தற்கொலைகள் தொடர்புடைய ஆபத்து காரணிகள் மற்றும் தொடர்புடைய ஆபத்துக் குழுக்களைக் கண்டறிந்து, தற்கொலைகள் மற்றும் சகோதர கொலைகளைத் தடுப்பதற்கான தீர்வு நடவடிக்கைகளை பரிந்துரைக்க ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.