2019 தேர்தலுக்கு ஒரு முன்னோட்டமாக பார்க்கப்படும் ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

பா.ஜ.க. ஆட்சியில் உள்ள சத்தீஷ்கர் மாநிலத்தில் காங்கிரசுடன் இருந்து பிரிந்து சென்று தனிக்கட்சியை தொடங்கிய அஜித் ஜோகியுடன் மாயாவதி கூட்டணி வைத்துள்ளார். இப்போது இதே நிலையை மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களுக்கு முன்னெடுத்துள்ளார் மாயாவதி.

மாயாவதி இதுதொடர்பாக பேசுகையில், “திக்விஜய் சிங் போன்ற காங்கிரஸ் தலைவர்கள் காங்கிரஸ்-பகுஜன் சமாஜ் கூட்டணியை விரும்பவில்லை. அவர்கள் அமலாக்கப்பிரிவு மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகளுக்கு பயப்படுகிறார்கள். மாயாவதிக்கு மத்திய அரசிடம் இருந்து நெருக்கடி என்று திக்விஜய் சிங் கூறுவதில் எந்த ஒரு அடிப்படையும் கிடையாது.காங்கிரஸ் கட்சியும் மிகவும் ஆணவமாக உள்ளது. தனியாகவே பா.ஜ.கவை எதிர்கொள்ளலாம் என நினைக்கிறார்கள்.

காங்கிரஸ் – பகுஜன் சமாஜ் கூட்டணி தொடர்பான சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் நோக்கம் நேர்மையானது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் கூட்டணிக்கு நெருக்கடியான நிலையே ஏற்படுத்துகிறார்கள்.

ஆனால் உண்மையான நிலை அவர்களுடைய (காங்கிரஸ்) ஊழல் மற்றும் தவறுகளை இன்னும் மக்கள் மறக்கவில்லை. தவறை சரிசெய்யுவும் அவர்கள் விரும்பவில்லை” என கூறியுள்ளார்.

மேலும் “பா.ஜ.கவை போன்று காங்கிரசும் எங்களுடைய கட்சியை அழித்துவிட வேண்டும் என்று சதி திட்டம் தீட்டுகிறது. எனவே, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் யாருடனும் கூட்டணி கிடையாது. நாங்கள் தனியாகவே போட்டியிடுவோம்’ என கூறியுள்ளார் மாயாவதி.

கருத்து கணிப்பு ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர் தேர்தல்களில் பெரும் வெற்றியை காங்கிரஸ் பெரும் என்று கூறிய நிலையில் மாயவதியின் இந்த அறிவிப்பு எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விவகாரத்தில் காங்கிரசுக்கு நேரிட்டுள்ள மற்றொரு பின்னடைவாகவே அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.

அதே சமயத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் துணைத்தலைவராக சமீபத்தில் 2018 ஜுலை மாதத்தில் ஜெய் பிரகாஷ் சிங் நியமிக்கப்பட்டார். அப்போது ஜெய் பிரகாஷ் சிங், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வெளிநாட்டவர் என்பதால் ஒருபோதும் ராகுல்காந்தியால் இந்தியாவில் வெற்றி பெற முடியாது என சர்ச்சை கருத்தை தெரிவித்தார். இதுதொடர்பாக நடவடிக்கை பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி, ஜெய் பிரகாஷ் சிங்கை துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டதும் குறிப்பிடதக்கது