பிரதமர் மோடியை விமர்சித்த மூத்த பத்திரிகையாளர் வினோத் துவாவை தேசத் துரோக வழக்கில் கைது செய்ய உச்சநீதிமன்றம் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
டெல்லியில் கடந்த மார்ச் 30ம் தேதி நடந்த மதக் கலவரம் தொடர்பான 15 நிமிட வீடியோவை யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்திருந்தார் வினோத் துவா. மேலும் பயங்கரவாத தாக்குதல்கள், மரணங்களை வாக்கு வங்கி அரசியலுக்கு பயன்படுத்துகிறார் மோடி என்று ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது வினோத் துவா பேசியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மதக் கலவரத்தை தூண்டியதாகவும் பிரதமர் மோடி பற்றி அவதூறாக, பொய்யான தகவல்களை கூறியதாகவும் மூத்த பத்திரிகையாளர் வினோத் துவா மீது பாஜக செய்தி தொடர்பாளர் அஜய் ஷ்யாம், சிம்லா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் இமாச்சல பிரதேச அரசு வினோத் துவா மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்தது. இது தொடர்பாக அவருக்கு கடந்த வியாழக்கிழமை சம்மன் அனுப்பப்பட்டது.
இதனால் இந்த வழக்கு விசாரணைக்கு தடை கோரி வினோத் துவா, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான சிறப்பு ஞாயிற்றுக்கிழமை பெஞ்ச் விசாரித்தது.
மேலும் வாசிக்க: சீனா, நேபாளம், பாகிஸ்தானின் ஒரு அங்குல நிலம் கூட தேவையில்லை; மத்திய பாஜக அமைச்சர்
பத்திரிகையாளர் வினோத் துவாவுக்காக ஆஜரான வழக்கறிஞர், கருத்து சுதந்திரம் எனும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டிருப்பதாக வாதிட்டார். இப்படி ஒவ்வொன்றும் வழக்கு தொடர்ந்தால் அரசுக்கு ஆதரவான இரண்டு தொலைக்காட்சிகள் மட்டுமே இயங்க முடியும் என குற்றம் சாட்டினார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் வினோத் துவாவைக் கைது செய்ய தடை விதித்து இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். மேலும் 24 மணி நேரத்துக்கு முன்பாக நோட்டீஸ் வழங்கி வீட்டில் வைத்து மட்டும் விசாரணை நடத்தலாம், ஆனால் இவ்வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று உத்தரவிட்டு வழக்கை ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Trackbacks/Pingbacks