கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அடுத்த வாரத்திற்குள் 1 கோடியை எட்டக் கூடும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

கொரோனாவால் உலகளவில் 96,24,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4,87,403 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 52,30,239 பேர் குணமடைந்துள்ளனர். வேகமாக பரவி வரும் கொரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் வெளியிட்டுள்ள செய்தியில், “கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அடுத்த வாரத்திற்குள் ஒரு கோடியை எட்டக் கூடும். எனவே தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்த ஆராய்ச்சியை தீவிரப்படுத்த வேண்டும் என நமக்கு இது நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

மேலும் கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்பைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சியில் அனைத்து நாடுகளும் ஈடுபட வேண்டும். கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு ஆக்ஸிஜன் செலுத்துவது அவசியமானது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளொன்றுக்கு 88,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் தேவைப்படும். வரும் வாரத்தில் 14,000 ஆக்ஸிஜன் சிலிண்டர்களை 120 நாடுகளுக்கு அனுப்பி வைக்க உலக சுகாதார அமைப்பு திட்டமிட்டுள்ளது” என்றும் டெட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் வாசிக்க: ட்ரம்ப் முடிவிற்கு அதிருப்தி தெரிவித்த கூகிள் CEO சுந்தர் பிச்சை