ஐயப்பன் இயக்கத்தில் கிரிக்கெட்டையும் கபடியையும் இணைத்து உருவாகியிருக்கும் படம் “தோனி கபடி குழு”. அபிலாஷ், லீமா, தெனாலி, சரண்யா உள்பட பலர் நடித்து ஐயப்பன் இயக்கி இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் நடிகர் ஆரி கூறியதாவது, “‘தோனி கபடி குழு’ படத்தின் தயாரிப்பாளர் நந்தகுமார் நம் கலாச்சாரம் சார்ந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார். அப்புக்குட்டி பேசும்போது ‘குடி’ இல்லாமல் ஒரு ட்ரைலரைப் பார்த்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார். படக்குழுவினர் ‘குடி’யை நம்பி படம் எடுக்கவில்லை என்பது மகிழ்ச்சியளித்தாலும் தமிழக அரசு இதில் கிடைக்கும் வருமானத்திற்காகவே மதுக்கடைகளை நடத்துகிறது என்பது வருத்தமளிக்ககூடிய ஒன்று.

வெளியில் உள்ள அரசியலை பேசுவதற்கு முன்பு சினிமாவில் இருக்கும் அரசியலைப் பற்றி பேச வேண்டும். இன்றைய சூழலில், ‘சர்காரில்’ ஆரம்பித்து ‘தோனி கபடி குழு’ போன்ற எந்த மாதிரியான படமாக இருந்தாலும் திரையரங்கிற்கு சென்றால் பிரச்னைகளைச் சந்தித்துக் கொண்டுதான் உள்ளது.

தமிழ் சினிமா மிகவும் ஆபத்தான சூழ்நிலையில் இருக்கிறது. இதை இப்படியே விட்டுவிட்டால் வருங்காலத்தில் மொத்த தமிழ் சினிமாவும் வெளிநாட்டு நிறுவனங்களிடம் சென்றுவிடும். ‘அமேசான்’, ‘நெட்ஃபிளிக்ஸ்’ வந்துவிட்டது எனக் கூறினார்.

மேலும், தற்போது நாம் கவனிக்க வேண்டியது டெல்டா மக்களைத்தான். கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இன்று எழுந்த மாதிரி கஜா புயல் வந்த அன்றே மொத்த தமிழகமும் எழுந்து நின்றிருந்தால் அந்த விவசாயி இறந்திருக்கமாட்டார். அதுதான் உண்மை. சென்னைக்கு ஒன்று நேர்ந்தால் மட்டும் தான் மொத்த தமிழ்நாடும் கொந்தளிக்கிறது. எங்கிருந்தெல்லாமோ உடனே நிவாரணம் கிடைக்கிறது. ஆனால், அதே சென்னையைத் தாண்டி ஒன்று நடந்தால் நாம் குரல் கொடுப்பதில்லை என்பதே உண்மை.

மேலும், கஜா புயலை தேசியப் பேரிடராக அறிவித்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இவற்றையெல்லாம் கூறினால் சினிமாக்காரர்கள் ஏன் அரசியல் பேசுகிறார்கள்? என்று கூறுகின்றனர். நாங்கள் அரசியல் பேசவில்லை. அரசியல்வாதிகள் அவர்கள் கடமையைச் சரியாக செய்தாலே நடிகர்களுக்கு வேலை இருக்காது” என்று நடிகர் ஆரி கூறினார்.