ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் “சர்கார்”. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். வரலட்சுமி, ராதாரவி, பழ.கருப்பையா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். ஆரம்பம் முதல் சர்ச்சையில் சிக்கிய சர்கார், கதைத்திருட்டு வழக்கிலும் சிக்கி மீண்டது.

இப்படம் வெளியாகும் முன்பே கதை பிரச்சனையில் சிக்கியது. ஒருவழியாக சமரசம் செய்யப்பட்டு இப்படம் வெளியானது. அதன்பின் படத்தில் தமிழக அரசு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள இலவச திட்டங்களையும் கடுமையாக விமர்சிக்கும் காட்சிகள் உள்ளதாக, அதை நீக்கும் வரை படத்தை திரையிடக்கூடாது என தமிழகம் முழுதும் திரையரங்குகள் முன் ஆளும் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அரசு தரப்பில் சர்கார் படத்தில் அரசு திட்டங்களை விமர்சித்ததற்காக முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இனி அவர் எடுக்கும் படங்களில் அரசின் திட்டங்களையும், அரசையும் விமர்சிக்கும் வகையில் காட்சிகள் அமைக்க மாட்டேன் என்று உத்தரவாத பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனையடுத்து, தற்போது சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் அரசின் இலவசப் பொருட்களை தவறாக விமர்சித்துள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகார் மனு அளித்ததையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சர்கார் பட இயக்குநர் முருகதாஸ் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தொடர்பு செய்திக்கு: கருத்து சுதந்திரத்திற்கு எதிராக தமிழக அரசிடம் மன்னிப்பு கேட்க இயலாது – ஏ.ஆர் முருகதாஸ் அதிரடி