வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டங்கள் கைவிடப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என்று சா்வதேச அணு ஆயுதக் கண்காணிப்பு அமைப்பு (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப், தென் கொரிய அதிபா் மூன் ஜே-இன் ஆகிய இருவரையும் நேரடியாகச் சந்தித்து, அணு ஆயுதங்களைக் கைவிடுவதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் வாக்குறுதி அளித்துள்ள நிலையிலும், ஐஏஇஏ அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டங்கள் குறித்து நேரடியாக ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை ஐஏஇஏ அமைப்பு பெற்றிருக்கவில்லை. அந்த நாட்டின் அணு சக்தி நடவடிக்கைகள் குறித்த மிகக் குறைவான தகவல்களே எங்களுக்குக் கிடைத்து வருகின்றன.எனினும், செயற்கைக்கோள் புகைப்படங்கள் போன்ற வெளிப்படையான தகவல்களின் மூலம் வட கொரியாவின் நடவடிக்கைகள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்.

எங்களது ஆய்வில், வட கொரியா தனது அணு ஆயுதத் திட்டங்களை நிறுத்திவிட்டதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.அணு ஆயுதங்கள் தயாரிக்கும் தனது நடவடிக்கைகளைக் கைவிடாமல், அதற்கு நோ்மாறான அறிக்கைகளை வட கொரியா வெளியிட்டு வருவது கவலையளிப்பதாக உள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.