வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளை பரப்புபவர்கள் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள். நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் ன முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சிவகாசி உள்பட தமிழ்நாடு முழுவதும் கட்டிட தொழில், ஹோட்டல் உள்ளிட்ட பல நிறுவனங்களில் வட மாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அதேபோல் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள்.

சமீபகாலமாக திருப்பூரில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது. தமிழ்நாட்டில் இந்தி பேசியதற்காக பிகார் மாநிலத்தைச் சேர்ந்த 15 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டு, அதில் 12 பேர் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்டதாக வட இந்தியாவிலிருந்து வெளியாகும் பிரதான செய்தி நிறுவனங்களே போலிச் செய்திகளை வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருந்த நேரத்தில் இது பரவியது, தமிழ்நாடு அரசிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் அந்தச் செய்திகள் போலியானவை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதில் வதந்தி பரப்புபவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு. இது தொடர்பாக நான் பேசி இருக்கிறேன். அனைத்துத் தொழிலாளர்களும், எங்கள் தொழிலாளர்கள் என்பதையும், எங்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவி செய்து வருபவர்கள் என்பதையும், அவர்களுக்கு எந்த பாதிப்பும் இங்கு நேராது என்பதையும் அவருக்கு உறுதியாகச் சொல்லி இருக்கிறேன்.

வெளிமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள், நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் விளைவிப்பவர்கள். சமூக ஊடகங்களில் இப்படி கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது.

இங்கு நிலவும் அமைதியான சூழ்நிலையைக் காணப் பொறுக்காத சிலர் அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில், தமிழ் மக்களின் பண்பாட்டை அவமதிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு சில குறுமதியாளர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாது.

வேறு மாநிலங்களில் நடைபெற்ற சில சம்பவங்களின் வீடியோக்களையும் படங்களையும் தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வேண்டுமென்றே வதந்தி பரப்பி, அச்சத்தையும் பீதியையும் பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அதோடு, வட மாநில தொழிலாளர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். அப்படி யாராவது அச்சுறுத்தினால், அறிவிக்கப்பட்டுள்ள காவல் துறை உதவி எண்கள் வாயிலாக தகவல் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு காவல்துறை கூறும்போது, “புலம்பெயர்ந்த வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக உண்மைக்குப் புறம்பான, பொய்யான தகவல் இணையதளத்தில், சமூக ஊடகங்களில் சிலரால் பரப்பப்பட்டுள்ளது. அப்படிப் பொய் செய்தி பரப்பியவர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டு வருகிறார்கள்” என்று தெரிவித்துள்ளது.