கொரோனா பொதுமுடக்கம் காலத்தில், கடன்தாரர்களிடம் இருந்து வட்டிக்கு வட்டி வசூலித்ததை நவம்பர் 5ந் தேதிக்குள் திரும்ப வழங்க வங்கிகள், நிதித்துறை நிறுவனங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசால் 6 மாதங்களுக்கு கடன் தவணை தள்ளிவைப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31,2020 வரை செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் படி இஎம்ஐ கட்டாத ஆறு மாதத்திற்கு வட்டி எதுவும் தள்ளுபடி செய்யப்படவில்லை.

மத்திய அரசு அறிவித்திருந்த இந்த சலுகை காலத்தில், கடன் தவணையைச் செலுத்தாமல் ஒத்தி வைத்தவர்களுக்கு வட்டிக்கு வட்டி என்று கூட்டு வட்டி விதிக்கப்பட்டது. இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கும் தொடரப்பட்டது.

இந்த வழக்கில் வட்டிக்கு வட்டி வசூலித்ததற்கு மத்திய அரசிற்கு தனது கண்டனங்களை பதிவு செய்தது உச்ச நீதிமன்றம். இதனையடுத்து மத்திய அரசு, ஆறு மாத காலத்திற்கு வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படாது என்று உறுதி அளித்தது.

இதன்படி அக்டோபர் 24ம் தேதி நிதி அமைச்சகம் இந்த திட்டத்தின் விவரங்களை வெளியிட்டது. அதன்படி, எம்எஸ்எம், இ கடன்கள் மற்றும் வீட்டு கடன்கள், வாகன கடன்கள், பர்சனல் லோன், கிரிடிட் கார்டு லோன், நுகர்வோர் கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடன்களுக்கும் ரூ.2 கோடிக்கு மிகாமல் வாங்கியிருந்தால் வட்டிக்கு வட்டி வாங்கியது தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது.

மேலும் இந்த வட்டிக்கு வட்டி (கூட்டு வட்டி) தள்ளுபடி அறிவிப்பு பயிர்க் கடன், டிராக்டர் கடன் பெற்றவர்களுக்குப் பொருந்தாது என்றும் மத்திய நிதியமைச்சகம் விளக்கம் அளித்தது.

இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வட்டிக்கு வட்டி வசூலிக்கப்படுவதற்கு விதிக்கப்பட்ட தடையை முறையாக அமல்படுத்த வேண்டும் என்று அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி மார்ச் 1, 2020 முதல் ஆகஸ்ட் 31, 2020 வரையிலான காலத்தில், கூட்டு வட்டியுடன் தவணையைச் செலுத்தியவர்களுக்கு நிலையான வட்டி போக, கூடுதலாக வசூலிக்கப்பட்ட வட்டித் தொகை நவம்பர் 5 ஆம் தேதிக்குள் கடன் தவணை செலுத்தியவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கவும், இது தொடர்பான வழிகாட்டும் நெறிமுறைகளையும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து புதுடெல்லியில் விவசாயிகள் போராட்டம்- அய்யாக்கண்ணு