மோடி குறித்து அவதூறாக பேசியதாக கூறி தொடரப்பட்ட அவதூறு வழக்கில், ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி கீதா கோபி அறிவித்து உள்ளார்.

கர்நாடகா மாநிலம் கோலாரில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ் மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, “எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?” விமர்சித்து பேசினார்.

இதன் மூலம் மோடி சமூகத்தையே ராகுல் காந்தி இழிவுபடுத்திவிட்டதாக கூறி குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்எல்ஏவுமான புர்னேஷ் மோடி சூரத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். சுமார் 4 ஆண்டுகளாக இந்த வழக்கு மீதான விசாரணை சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்நிலையில் கடந்த மார்ச் 23 ஆம் தேதி சூரத் மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட் எச்.எச்.வர்மா, ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அதன் தொடர்ச்சியாக அவருக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கிய நீதிபதி, 30 நாட்களில் அவதூறு வழக்கு தொடர்பாக விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு அவகாசம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து மார்ச் 24 ஆம் தேதி ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவி உடனடியாகப் பறிக்கப்பட்டது. இந்த விவகாரம் தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவதூறு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி ராகுல் காந்தி தொடர்ந்த வழக்கை சூரத் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

மேலும் எம்பிக்களுக்கு வழங்கப்படும் அரசு பங்களாவில் இருந்து ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என மக்களவை செயலகம் ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, டெல்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்து, அதை மக்களவை செயலகத்திடம் ராகுல் காந்தி சமீபத்தில் ஒப்படைத்தார்.

அரசு பங்களாவை காலி செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, “இந்துஸ்தானை சேர்ந்த மக்கள் 19 ஆண்டுகளாக இந்த வீட்டை எனக்கு கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். உண்மையைப் பேசுவதற்கான விலை இது. உண்மையை பேசுவதற்கு எந்த விலையையும் கொடுக்க தயாராக இருக்கிறேன்” என்றார்.

இந்நிலையில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி
மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரணை செய்வதற்காக குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நீதிபதி கீதா கோபியை நியமித்திருந்தார்.

அதன்படி ராகுல் காந்தியின் வழக்கறிஞர் பி.எஸ்.சாப்பனேரி இன்று ஆஜராகினார். அப்போது வழக்கில் இருந்து தான் விலகியதாக நீதிபதி கீதா கோபி கூறியுள்ளார். அத்துடன் இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவதற்காக தலைமை நீதிபதியின் பார்வைக்கு அனுப்பும்படி பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார். எனவே, வேறு நீதிபதியை நியமிக்க இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் எனக் கூறப்பட்டுள்ளது.