முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு, அதன் நீர்மட்டத்தை நிர்வகிக்க கண்காணிப்புக் குழு உள்ளது. அணையை நிர்வகிப்பது எங்கள் வேலையல்ல என்று தமிழ்நாடு மற்றும் கேரளா அரசுகளிடம் உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு – கேரளா எல்லையில் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை தொடர்பாக கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அந்த மனுவில், “முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாடு முன்கூட்டியே எச்சரிக்கை எதுவும் கொடுக்காமல் நள்ளிரவில் தண்ணீரை திறந்துவிடுவதாகவும்,

அணை பலவீனமாக இருப்பதால் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில் தண்ணீரை திறப்பதற்கு 24 மணி நேரம் முன்பு தமிழ்நாடு அரசு தங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேரளா கோரியது.

இதனையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், அணை பலமாக இருப்பதாக நிபுணர் குழு ஏற்கெனவே அறிக்கை அளித்திருப்பதாக குறிப்பிட்டிருந்தது.

ஏற்கெனவே கடந்த மாதம் இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, முல்லைப் பெரியாறு அணை தொடர்பான எல்லா பிரச்சினைகளுக்கும் மனு தாக்கல் செய்யக் கூடாது என்றும் அரசியலுக்கு உச்ச நீதிமன்றத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில், நேற்று (11.1.2022) இவ்வழக்கு நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், நீதிபதி தினேஷ் மகேஷ்வரி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, “முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்யவும் அணையின் நீர்மட்டத்தை நிர்வகிக்கவும் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன் பணியில் நாங்கள் தலையிடமுடியாது.

முல்லைப் பெரியாறு அணையை நிர்வகிப்பது எங்கள் வேலையும் அல்ல. எனவே தமிழ்நாடு, கேரளா மாநிலங்கள் உட்பட வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் வழக்கில் நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டிய முக்கிய பிரச்சினைகளை பிப்ரவரி மாதத்துக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று கூறி வழக்கின் விசாரணையை பிப்ரவரி 2-வது வாரத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.