மியான்மர் நாட்டின் முன்னாள் அதிபர் மற்றும் தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.

மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை மோசடி எனக் கூறி, கடந்த பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி அந்நாட்டு ராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது.

அதைத்தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது. முக்கியமாக ஆங் சான் சூகி உள்ளிட்ட சில தலைவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்கள்.

மேலும் ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கடந்த 8 மாதங்களாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மியான்மர் நீதிமன்றம், ராணுவத்திற்கு எதிராக கருத்துகளை பரப்பியதற்காகவும், கொரோனா விதிமுறைகளை மீறியதற்காகவும் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குவதாக பரபரப்பு தீர்ப்பு வழங்கியிருக்கிறது.

அதேபோல், அதிபர் வின் மைன்டுக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. மக்களாட்சி ஆதரவாளர் மற்றும் தேசிய ஜனநாயக லீக் கட்சி தலைவர் ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியதற்கு நாடு முழுவதும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன.