கடன் சீரமைப்பு தொடர்பாக, கே.வி.காமத் தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைகளை தாக்கல் செய்யும்படி, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் கடன்களுக்கான, இ.எம்.ஐ., எனப்படும் மாதத் தவணையை ஒத்திவைக்கும் வழக்கின் விசாரணை, மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகளை எதிர்கொள்ளும் வகையில், மத்திய அரசு பல்வேறு சலுகைகள், அறிவிப்புகளை வெளியிட்டது. ‘கடன்களுக்கான, இ.எம்.ஐ.,யை ஒத்திவைக்கலாம்’ என, அதில் குறிப்பிடப்பட்டது. அதன்படி, இந்தாண்டு, மார்ச் முதல், ஆக., வரையிலான, ஆறுமாதங்களுக்கு இந்தச் சலுகை அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதை கணக்கில் கொள்ளமால் வங்கிகள்  ஆறு மாதங்களுக்கும், கடன் மீது வட்டி விதித்ததால் கடன் பெற்றோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர் .. 

இதன் காரணமாக  இ.எம்.ஐ.,யில் ஏற்கனவே வட்டி சேர்க்கப்பட்டுள்ள நிலையில், கூட்டு வட்டி, அதாவது வட்டி மீது வட்டி விதிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும்’ என, உச்ச நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கில், மத்திய அரசு சமீபத்தில், தன் பதில் மனுவை தாக்கல் செய்தது. அதில், வட்டி மீது விதிக்கப்பட்டுள்ள வட்டியை ரத்து செய்வதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி, எம்.ஆர்.ஷா அமர்வு முன், ‘வீடியோ கான்பரன்ஸ்’ முறையில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, ‘கிரடாய்’ எனப்படும், ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், ‘மத்திய அரசின் அறிவிப்பில், ரியல் எஸ்டேட் துறை சேர்க்கப்படவில்லை. ‘இது எங்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்’ என, தெரிவிக்கப்பட்டது.

இதனை  தொடர்ந்து, இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வழக்கறிஞர்களிடம், இது தொடர்பாக அமர்வு கேள்வி எழுப்பியது. அப்போது நீதிபதிகள் தனது உத்தரவில் 

 “ ரியல் எஸ்டேட், மின் உற்பத்தி உள்ளிட்ட துறையினர், தங்களுக்கும் சலுகை அளிக்க வேண்டும் என கோரியுள்ளனர். இந்த விவகாரத்தில், சமநிலையான ஒரு நடவடிக்கை தேவை.

கடன் சீரமைப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட, கே.வி.காமத் குழுவின் முழு பரிந்துரைகளை தாக்கல் செய்ய வேண்டும். மேலும் மத்திய அரசின் நிலை குறித்து, இந்திய வங்கிகள் சங்கம் தன் கருத்தை தெரிவிக்க வேண்டும்.அனைவரும் தங்களுடைய அறிக்கையை, ஒரு வாரத்துக்குள் தாக்கல் செய்ய வேண்டும். மேலும், கடன் ஒத்திவைப்பு தொடர்பாக, இதுவரை வெளியிட்ட அறிவிப்பு கள், அரசாணைகளையும் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்ற  அமர்வு உத்தரவிட்டது.

” ஹிந்தி தெரியாதா” கொதிக்கும் நெட்சின்ஸ் .. அவமதிப்பு செய்த வங்கி அதிகாரி இடமாற்றம்