அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கி வரும் கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் மனுஸ்மிருதி குறித்து எழுப்பப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அமிதாப் பச்சன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த 20 வருடங்களாக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி கவுன் பனேகா க்ரோர்பதி (kaun banega crorepati). இதன் 12ம் பகுதி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. சில சமயங்களில் இந்த நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சிறப்பு ஒளிபரப்பில் நடிகர் அனூப் சோனியும், சமூக சேவகர் பேஜாவாடா வில்சனும் கலந்து கொண்டனர். அப்போது 6,40,000 ரூபாய் பரிசுத் தொகைக்கான கேள்வி கேட்கப்பட்டது. அதில், 1927-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ம் தேதி, டாக்டர் அம்பேத்கரும், அவரது ஆதரவாளர்களும் எந்த நூலின் பிரதிகளை தீயிட்டு கொளுத்தினர்?
A) விஷ்ணு புராணம்
B) பகவத் கீதை
C) ரிக் வேதம்
D) மனுஸ்மிருதி

இதற்கான சரியான விடையான மனுஸ்மிருதியைத் தேர்ந்தெடுத்து வென்ற பின் அமிதாப் பச்சன், “1927ஆம் ஆண்டு, டாக்டர் அம்பேத்கர், பண்டைய இந்து நூலான மனுஸ்மிருதியில், சமூகத்தில் தீண்டாமை மற்றும் பாகுபாடை சித்தாந்த ரீதியில் நியாயப்படுத்தியிருந்ததாக அதைக் கண்டித்தார். அதன் பிரதிகளையும் எரித்தார்” என்று பேசினார்.

இதனைத் தொடர்ந்து, இந்த கேள்வி தொடர்பாக சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிகழ்ச்சி இடதுசாரி கொள்கை பிரச்சாரத்தை மேற்கொள்கிறது என ஒரு சிலர் குற்றம்சாட்டி இணையத்தில் பகிர்ந்துள்ளனர். சிலர் இது பொது அறிவு கேள்வி என்பதால், இதில் என்ன தவறு உள்ளது என்று இதற்கு ஆதரவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தனது ட்விட்டர் பதிவில், “கோடீஸ்வரன் நிகழ்ச்சியில் இடதுசாரிகளின் சிந்தனைகள் திணிக்கப்பட்டுள்ளது. கலாச்சார ரீதியிலான யுத்தங்கள் இப்படித்தான் வெல்லப்பட வேண்டும் என அப்பாவிக் குழந்தைகள் இப்படித்தான் கற்றுக் கொள்வார்கள். இதன் பெயர் தான் குறியீடு” என்று குறிப்பிட்டுள்ளார். இது பெரிய அளவில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த சூழலில் லக்னோவைச் சேர்ந்த அனைத்திந்திய இந்து மகாசபாவின் மாநிலத் தலைவர் ரிஷி குமார் என்பவர் உத்தரபிரதேச மாநிலம், லக்னோ அடுத்த திரிவேதி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “டிவி நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வி கண்டனத்திற்கு உரியது. இது சமூகத்தில் சாதி ரீதியிலான வேற்றுமைகளை ஏற்படுத்தும். எனவே சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள், டிவி சேனல், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

இதனையடுத்து திரிவேதி போலீசார் அமிதாப்பச்சன் மீதும், நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனுநீதியை எதிர்த்து திருமாவளவன் போர்க்கொடி; பாஜக, ஆர்எஸ்எஸ் கலக்கம்