கொரோனா நோயாளிகள் குணமடைந்துவிட்டார்களா என பரிசோதிக்காமலேயே வீட்டுக்கு அனுப்புவதா.. என்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள புதிய கொரோனா பரிசோதனை விதிமுறை குறித்த சர்ச்சை வெடித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஜூன், ஜூலை மாதங்களில் புதிய உச்சத்தை எட்டும் எனவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் எச்சரித்திருந்தனர்.

மேலும் வாசிக்க: எய்ம்ஸ் மருத்துவமனையின் திடீர் எச்சரிக்கையால் மக்கள் அச்சம்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் நாள்தோறும் அதிகரித்துவரும் நிலையில், இன்னும் சில நாட்களில் இது ஒரு லட்சத்தைத் தாண்டிவிடும் என கணிக்கப்படுகிறது. நோயாளிகள் அதிகரிப்பதற்கேற்ப அவர்களைத் தங்க வைப்பதற்கு போதுமான படுக்கை வசதி மருத்துவமனைகளில் இதுவரை உருவாக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துவருகிறது.

இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நோயாளியை 14 நாட்கள் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்து, வீட்டுக்கு அனுப்பும் முன்பு கொரோனா பரிசோதனை நடத்தி, அதில் தொற்று இல்லை என்று முடிவு வந்து, 24 மணி நேரத்தில் மீண்டும் ஒரு சோதனை செய்து அதிலும் தொற்று இல்லை என்று முடிவு வந்தால் மட்டுமே வீட்டுக்கு அனுப்பப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, குணமடைந்த கொரோனா நோயாளிகளை வீட்டுக்கு அனுப்பும் கொள்கையில் சில மாற்றங்களை மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.

அதன்படி, கடுமையான உடல் நலப் பிரச்சினைகள் இருப்பவர்களும், கொரோனா கடுமையாக பாதித்த நோயாளிகளுக்கு மட்டுமே, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யும் முன்பு கொரோனா சோதனை நடத்தி அவர்களுக்கு தொற்று இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.

கொரோனா பாதித்து, ஆனால் அறிகுறிகள் தென்படாத, எந்த பாதிப்பும் ஏற்படாத, மிகக் குறைவான அறிகுறிகளே உள்ள நோயாளிகளை, மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு அனுப்பும் போது மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டிய அவசியமில்லை.

மேலும் வாசிக்க: மே 12 முதல் தொடங்குகிறது முதற்கட்ட ரயில் சேவை

உடல் வெப்பநிலை அதிகமாக இல்லாமல், 95 சதவீத ஆக்ஸிஜன் நுகர்வு இருப்பவர்களை, 10 நாட்களிலேயே வீட்டுக்கு அனுப்பலாம் என்றும், அவர்களுக்கு மீண்டும் கொரோனா சோதனை நடத்தப்பட வேண்டாம் என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு வீட்டுக்கு அனுப்பப்படுவோர், வீட்டில் 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை செய்வதற்கு போதுமான ‘ஆர்டி பிசிஆர்’ கருவிகள் மத்திய அரசின் கையிருப்பில் இல்லை, அதனால் தான் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.