விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இன்று (டிசம்பர் 03) பேச்சுவார்த்தையின் போது, மத்திய அரசு வழங்கிய மதிய உணவையும், தேநீரையும் புறக்கணித்து, தாங்கள் கொண்டுவந்த உணவுகைளே சாப்பிட்டுள்ளது விவசாயிகளின் உறுதியினை எடுத்துக் காட்டியுள்ளது.

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அமல்படுத்திய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் தொடர் அமைதி போராட்டத்தை கைவிடக் கோரி மத்திய அரசு நடத்திய முதல் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனையடுத்து விவசாயிகளின் கோரிக்கைகள் ஏற்கப்படும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள விவசாய சங்கங்கள், அனைத்து சங்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது என்றும் ஏற்கனவே கூறியிருந்தது.

இந்நிலையில் இன்று (டிசம்பர் 03) 2 ஆம் கட்ட பேச்சு வார்த்தை டெல்லி விஞ்ஞான் பவனில் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் 40 விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். பேச்சுவார்த்தை மதிய நேரத்தையும் தாண்டி தொடர்ந்தது. இடையில் மதிய இடைவேளையின்போது, பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டுள்ள விவசாயிகளுக்கு அரசு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது.

ஆனால், விவசாய சங்க தலைவர்கள், அரசு வழங்கிய மதிய உணவையும், தேநீரையும் புறக்கணித்ததுடன், தாங்கள் கொண்டுவந்த உணவுகைளே உண்டனர். விவசாயிகளின் இந்த போராட்ட மன உறுதியினை பலரும் பாராட்டி வருகின்றனர்.

விவசாயிகள் போராட்டதிற்கு ஆதரவு; லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிப்பு