தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 1600 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, 23 நாட்களாக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக சென்னை வள்ளுவா் கோட்டம் அருகில் திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், காவல்துறை அனுமதி தர மறுத்த நிலையில், தடையை மீறி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 1,600 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இப்போராட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, காங்கிரஸ் தங்கபாலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் முத்தரசன், விசிக தலைவா் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவா்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக வேளாண் சட்டங்களை எதிர்த்து பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள் அந்தப் போராட்டத்தில் என்றைக்கு வெற்றி பெறுகிறார்களோ, அதுவரையில் நம்முடைய போராட்டமும் ஓயாது.

மக்களை பற்றி கவலைப்படாமல், கார்ப்பரேட் நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு பேச்சுவார்த்தை என்ற பெயரில் நாடகம் நடத்தி வருகிறது. விவசாயிகள் கோரிக்கை ஒன்றே ஒன்று தான். இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்பது தான்” எனக் கூறி மத்திய, மாநில அரசுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

மருத்துவர் கஃபீல்கானின் விடுதலையை எதிர்த்த யோகி அரசின் மனு தள்ளுபடி