மத்திய அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்களை வெளிப்படுத்துங்கள் பிரதமர் அலுவலகத்திற்கு சிஐசி அதிரடியாக உத்தரவு . 2014 முதல் 2017-ம் ஆண்டு வரையில் மத்திய அமைச்சர்களுக்கு எதிராக பெறப்பட்ட ஊழல் புகார்களையும், அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தான தகவல்களை வெளியிடும்படி பிரதமர் அலுவலகத்திற்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய வனப்பணிகள் துறை அதிகாரி சஞ்சய் சதுர்வேதியின் மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையர் ராதா கிருஷ்ணா மாதூர், பிரதமர் மோடியின் ஆட்சியின் போது எவ்வளவு கருப்பு பணம் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது, அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென்பதை பட்டியலிடுங்கள் என உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்ட கருப்பு பணத்தை இந்தியர்களின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்தது தொடர்பான தகவல்களையும் வெளியிட உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் சதுர்வேதி, கருப்பு பணம் தொடர்பாக எழுப்பிய கேள்விகளை பிரதமர் அலுவலகம் நிராகரித்துவிட்டது.

கருப்பு பணம் தொடர்பாக அவர் எழுப்பிய கேள்விகளை, சட்டத்தின் “தகவல்” என்ற பிரிவின் கீழ் வாராது என்று கூறி நிராகரித்துவிட்டது. ஆனால் இந்த கருத்தை நிராகரித்துள்ள ஆணையர் ராதா கிருஷ்ணா தகவலை வெளிப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இதேபோன்று மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் தொடர்பாக சதுர்வேதி எழுப்பிய கேள்விகளுக்கும் பதிலளிக்கும்படி பிரதமர் அலுவலகத்திற்கு மத்திய தகவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

2014 முதல் 2017-ம் ஆண்டு வரையில் மத்திய அமைச்சர்களுக்கு எதிராக பெறப்பட்ட ஊழல் புகார்களையும், அதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தான தகவல்களை வெளியிடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இதேபோன்று எய்ம்ஸ் அதிகாரிகளுக்கு எதிரான ஊழல் புகார்கள் தொடர்பாக வைக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? என்பதையும் தெரியப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

எற்கனவே ராபல் ஊழல் புகாரில் மோடியே சிக்கி தவிக்கும் வேளையில் இது மேலும் பாஜகவுக்கு சிக்கலை உண்டாக்கும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்