யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியின் போது, போட்டி நடுவரை ‘நீ ஒரு திருடன்’ என்று அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் திட்டியது சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.

யுஎஸ் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் – ஜப்பான் வீராங்கனை நவோமி ஒஸாகா ஆகியோர் மோதினர். இதில், ஒஸாமா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தினார். இதன் மூலம், ஒஸாகா யுஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் சாம்பியன் பட்டத்தை வென்றார். இவர், கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முதல் ஜப்பான் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.

இறுதிப்போட்டியின் போது செரீனா வில்லியம்ஸின் பயிற்சியாளர் அவருக்கு சைகை மூலம் ஆட்டம் நுணுக்கம் பற்றி விவரித்தார். பொதுவாக ஏடிபி வகை போட்டிகளில் பார்வையாளர் வரிசையில் இருந்து வீரர்களின் பயிற்சியாளர் ஆலோசனைகள் தெரிவிக்கலாம். ஆனால் கிராண்ட் லாம் போட்டிகளில் அதற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து போட்டி நடுவர் ராமோஸ் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் செரீனா கோபத்துடன் நடுவரை தீட்டி தீர்த்தார்.

இரண்டாவதாக ஆட்டத்தின் நடுவில் செட்டை இழந்த எரிச்சலில், செரீனா டென்னிஸ் ராக்கெட்டை மைதானத்தில் வீசி எறிந்தார். அவரது இந்த செயலுக்காக நடுவர் பெனால்டி நடவடிக்கை எடுத்தார். இதனால் ஆத்திரமடைந்த செரீனா பல முறை கோபத்தில் நடுவரைத் திட்டினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் இந்த ஆட்டத்தில் மோசடி எதுவும் செய்யவில்லை. எனது பயிற்சியாளர் என்ன சிக்னல் கொடுத்தார் என்று கூட நான் பார்க்கவில்லை. போட்டி நடுவர் ராமோஸ் ஒரு பொய்யர். திருடர். நான் கலந்து கொள்ளும் எந்த போட்டிகளிலும் ராமோஸ் நடுவராக இருக்கக் கூடாது. என்னிடம் இருந்து மன்னிப்பை எதிர்பார்க்கிறார்கள். நீங்கள் தான் என்னிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.

பொதுவாக இங்கு ஆண்களை விட பெண்களிடம் நடுவர்கள் நடந்து கொள்ளும் விதம் வேறுபாடானது. வீராங்கனைகளுக்கு சம முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பெண்களின் உரிமைக்காக நான் போராடுகிறேன்.இவ்வாறு செரீனா வில்லியம்ஸ் தெரிவித்தார்.