பேரறிவாளன் விடுதலையில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்புடையது அல்ல. தமிழக அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் விரைவில் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து சிபிஐயின் பல்நோக்கு கண்காணிப்புக் குழு விசாரணை நடத்தி வருகிறது

இதற்கிடையே, 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக் கோரி அரசியல் கட்சியினர், தலைவர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

இதனையடுத்து கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக அமைச்சரவையில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் முன்கூட்டியே விடுதலை செய்ய தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் தமிழக அரசு தீர்மானத்தின் மீது முடிவெடுக்க ஆளுநர் தாமதம் செய்வதாக கூறியும், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்ய வேண்டும் என கோரியும் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று (7.12.2021) உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநர் பேரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர். ஆனால் 7 பேர் விடுதலை வழக்கில் ஆளுநர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருகிறார்.

கடந்த 30 ஆண்டுகாலமாக சிறையில் உள்ளதால் பேரறிவாளனை உடனடியாக விடுதலை செய்வதற்கான உத்தரவை உச்சநீதிமன்றமே பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அப்போது, ஒன்றிய அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல், இந்த வழக்கினை ஒரு வார காலம் ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இன்று வழக்கை விசாரித்த நீதிபதிகள், “பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் முடிவு செய்யலாம் என்று ஏற்கனவே அறிவித்துள்ளோம். ஆனால் ஆளுநர் ஏன் இதுவரை முடிவெடுக்கவில்லை என்ற கேள்வி எழுப்பிப்பட்டது.

மேலும், பேரறிவாளன் விடுதலையில் ஆளுநர் காலம் தாழ்த்தியது ஏற்புடையது அல்ல. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் குடியரசு தலைவர் முடிவெடுக்க அதிகாரம் இல்லை. தமிழ்நாடு அரசின் தீர்மானத்தின் மீது ஆளுநர் விரைவில் முடிவெடுக்க வேண்டும்” என உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் ஒன்றிய அரசு இனியும் தாமதிக்ககூடாது. ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டதால் இந்த வழக்கு விசாரணையை ஜனவரி மாதத்திற்கு ஒத்தி வைப்பதாகவும், ஆனால் ஒன்றிய அரசு தரப்பில் இனி வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று கேட்கக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.