புளூ சட்டை மாறன் இயக்கிய ‘ஆண்டி இந்தியன்’ திரைப்படத்தில் 38 காட்சிகளை ‘கட்’ செய்ய வேண்டும், படத்தின் தலைப்பையும் மாற்ற வேண்டும் என்று திரைப்பட தணிக்கைக் குழு தெரிவித்துள்ளது சர்ச்சையாகி உள்ளது.

திரைப்படத்துறையில் நீண்ட அனுபவம் பெற்ற மாறன் யூடியூபில் தமிழ் டாக்கிஸ் எனும் சேனல் வைத்து திரைப்படங்களுக்கு விமர்சனம் கொடுத்து வந்தார். எந்த திரைப்படமாக இருந்தாலும், யார் ஹீரோவாக இருந்தாலும், அதைப் பற்றி சற்றும் யோசிக்காமல் துணிச்சலாக விமர்சிப்பவர் மாறன்.

புளூ சட்டை மாறன் தற்போது தனது முதல் படமான ‘ஆண்டி இந்தியன்’ எனும் படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இசையமைத்து இயக்கியுள்ளார். ஆண்டி இந்தியன் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் ரம்ஜான் பண்டிகை தினத்தன்று வெளியானது.

இந்த போஸ்டர் மத நல்லிணக்கத்தையும், அரசியல் நய்யாண்டியையும் கொண்டிருக்கும் படம் எனக் காட்டுகின்றன. மேலும் போஸ்டரில் ஹிந்து, கிறிஸ்டியன், முஸ்லிம் என அனைத்து குறியீடுகளும் இருப்பதால் படம் கண்டிப்பாக இந்திய அரசியலைப் பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படத்தை ஏப்ரல் 5 ஆம் தேதி, 2021 அன்று சென்சார் குழுவினர் பார்த்தனர். ஆட்சேபகரமான வசனங்கள் அல்லது காட்சிகள் இருந்தால், அவற்றை மாற்றவோ அல்லது நீக்கவோ சொல்வது சென்சார் குழுவினரின் வழக்கம். ஆனால் ஆண்டி இந்தியன் படத்தை முழுமையாக நிராகரித்து தடை செய்தனர்.

மதம் சார்ந்த சமகால பிரச்னைகளையும், அரசியலையும் மையப்படுத்தி அழுத்தமாகவும், நையாண்டி பாணியிலும் எடுக்கப்பட்ட இப்படத்தை பார்த்த திரையுலக பிரபலங்கள் பலர் பாராட்டி வரும் வேளையில், சென்சார் குழுவினர் இதற்குத்தடை விதித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இப்படத்தை ரிவைசிங் கமிட்டி எனச் சொல்லப்படும் மறு தணிக்கைக்கு அனுப்பியது படக்குழு. பெங்களூரில் பிரபல இயக்குனர் நாகபரணா தலைமையில் பத்து பேர் கொண்ட குழுவினர் படத்தைப் பார்த்தனர்.

ஆண்டி இந்தியன் எனும் பெயரை மாற்றிவிட்டு வேறு பெயர் வைக்க வேண்டும். நடிகர் கபாலி எனும் வசனம் அடிக்கடி வருகிறது. அப்பெயரைக் கொண்ட வசனம் வரும் காட்சிகள் அனைத்தையும் நீக்க வேண்டும். கமுக, அகமுக என்று வரும் இரண்டு கட்சிகளின் பெயர்களையும் நீக்க வேண்டும்.

இப்படத்தில் வரும் தேசியக்கட்சி அரசியல்வாதி கதாபாத்திரம் ஒன்றின் பெயர் ‘ராஜா’ என்று இருக்கிறது. அந்தப் பெயரையும் நீக்க வேண்டும். மேலும் படத்தில் 38 காட்சிகளை ‘கட்’ செய்து மறு தணிக்கைக்கு உட்படுத்தினால், U/A சான்றிதழ் தருகிறோம் என மறு தணிக்கை குழுவினர் கூறியுள்ளனர்.

மேற்கண்ட மாற்றங்களைப் படத்தில் செய்தால் அது படத்தின் போக்கையே பாதித்துவிடும் எனக் கருதிய ஆண்டி இந்தியன் படக்குழுவினர், திரைப்படம் சென்சார் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால் நேரடியாக ஓடிடியில் எந்தவித ‘கட்’களும் இன்றி வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உட்தா பஞ்சாப், பத்மாவதி போன்ற ஹிந்தி படங்களுக்கு அடுத்து அதிகப்படியான ‘கட்’களை வாங்கிய திரைப்படம் ‘ஆன்டி இண்டியன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா மருந்துகள் பட்டியலில் இருந்து ரெம்டெசிவிர் திடீர் நீக்கம்: உலக சுகாதார அமைப்பு