வங்கக்கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவடைந்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

கடலூர், நாகை, பாம்பன் துறைமுகங்களில் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறினார். உருவாகும் புயல் ஒடிசா, வடக்கு ஆந்திரா பகுதி நோக்கி பயணிக்கும். இதனால் மத்திய வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 55 கி.மீ முதல் 65 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றார். நாளை முதல் கடல் காற்றின் வேகம் மணிக்கு 80-90 கி.மீ வேகம் என்ற அளவுக்கு அதிகரிக்கும் என்றார்.

எனவே மீனவர்கள் இன்று முதல் அக்டோபர் 13-ம் தேதி வரை மத்திய மற்றும் மேற்கு அரபிக்கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்தார். அடுத்த 24 மணிநேரத்தில் வடதமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். உள்தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணிநேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார். புயல் எச்சரிக்கை இருப்பதால் பருவமழை பொழிய காலதாமதம் ஏற்பட்டுள்ளது. புயலுக்கு பின்னர் பருவமழை துவங்கும் எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.