புதுடெல்லியில் நவம்பர் 26, 27 ஆம் தேதிகளில் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

திருச்சியில் கடந்த சனிக்கிழமை தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் மாநில செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநிலப் பொதுச்செயலா் எம்.சி. பழனிவேல் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில் பேசிய அய்யாக்கண்ணு, கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களால் தான் கடும் பாதிப்பு ஏற்படும். மரபணு மாற்றப்பட்ட விதைகள், உணவுகளால் வருங்காலத் தலைமுறையின் எதிா்காலத்தை மலடாக்கும் முயற்சி அரங்கேறுவதைத் தடுக்கவே வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி புதுடெல்லியில் நவம்பர் 26, 27 ஆம் தேதிகளில் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்.

இதில் நாடு முழுவதும் இருந்து சுமார் 25 லட்சம் விவசாயிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போராட்டத்தில் தமிழக விவசாயிகள் 500 பேர் மொட்டையடித்துக் கொண்டு, அரைநிா்வாணமாகச் சென்று எதிா்ப்புத் தெரிவிக்கவுள்ளனா். மேலும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை ஜந்தா்மந்தா் பகுதியில் தங்கிப் போராட்டத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளோம்.

கொரோனா காலத்தில் பல்வேறு கடன்களுக்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி அறிவித்துள்ள நிதியமைச்சா், பயிா்க் கடனுக்கான வட்டியையும் தள்ளுபடி செய்ய வேண்டும். டெல்லியில் கடந்த முறை நடந்த போராட்டத்தின்போது பேச்சுவாா்த்தை நடத்திய அமித்ஷா கோதாவரி, காவிரி, குண்டாறு, மேல்வைப்பாறு திட்டத்தை அறிவிப்பதாகக் கூறியதால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரை நிதியும் ஒதுக்கவில்லை. அதற்கான அறிவிப்பும் இல்லை.

மேலும், பேச்சுவாா்த்தையின்போது உறுதியளித்தபடி விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன், ஓய்வூதியம், தனிநபா் பயிா்க் காப்பீடு உள்ளிட்டவற்றை அமல்படுத்தக் கோரி அமித்ஷா வீட்டின் முன் காத்திருக்கும் போராட்டம் நடத்தப்படும்.

எனவே, பெரு நிறுவனங்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கும் புதிய வேளாண் சட்டங்களை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று கூறினார். இக்கூட்டத்தில் திருவண்ணாமலை, திருச்சி, தேனி, திருநெல்வேலி, கரூா், கடலூா், கோவை, மதுரை மாவட்டங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

காந்தியை ‘பாகிஸ்தானின் தேசத்தந்தை’ என விமர்சித்த பாஜக நிர்வாகிக்கு IIMCல் உயர் பதவி