உலகளவில் கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா 4-வது இடத்தை பிடித்துள்ளது, இந்தியாவில் சமூக பரவல் வேகமாக பரவுகிறதோ என்ற அச்சத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் வுஹான் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 200 நாடுகளுக்கு மேல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தற்போது இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், மற்ற நாடுகளில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காததாக உள்ளது. உலகளவில் கொரோனா வைரஸால் பாதிகக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75.98 லட்சத்தை கடந்துள்ளது. இவர்களில் 38 லட்சத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ள நிலையில் 423,869 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் அதிகபட்சமாக 20 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 116,035 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவை அடுத்து பிரேசிலில் 8 லட்சம் பேரும், ரஷ்யாவில் 5 லட்சம் பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதிப்பில் பிரிட்டனை பின்னுக்கு தள்ளி இந்தியா 4-வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 298,283 ஆக அதிகரித்துள்ளது. இதில் 147,195 பேர் குணமடைந்துள்ளனர். 8,501 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் இந்தியாவில் வைரஸ் தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க: டெல்லியில் தொடரும் கொரோனா இறப்பு எண்ணிக்கை சர்ச்சை

மாநில அளவிலான பாதிப்புகளில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு 94,041 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2வது இடத்தில் உள்ள தமிழகத்தில் நேற்று வரை 38,716 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்ததாக டெல்லியில் 32,810 பேர், குஜராத்தில் 21,521 பேர், உத்தர பிரதேசத்தில் 11,610 பேர், ராஜஸ்தானில் 11,600 பேர், மத்திய பிரதேசத்தில் 10,049 பேர், மேற்குவங்கத்தில் 9,328 பேரும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.