பிரான்சில் அரசுக்கு எதிராக போராடும் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபடுவதை தவிர்க்க 400 பேர் கைது செய்யப்பட்டனர்.
 
89 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். போராட்டக்காரர்கள் சிலரிடம் பிரான்ஸ் பிரதமர் பிலிப்பி நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் கோரிக்கைகளை அதிபரிடம் தெரிவிப்பதாக உறுதி அளித்துள்ளார்.
 
பிரான்ஸ் அதிபராக இம்மானுவேல் மெக்ரான் பதவி ஏற்றதும், பெரும் பணக்காரர்களுக்கு விதிக்கப்பட்ட சொத்து வரியை குறைத்தார்.
 
முதலீடுகளை அதிகரிப்பதற்காகவும், வேலை வாய்ப்பை உருவாக்குவதற்காகவும் இந்த நடவடிக்கை என கூறினார். தற்போது பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைக்காகவும், சுற்றுச்சூழல் மாசுவை குறைக்கும் நோக்கத்திலும், பெட்ரோல், டீசல் காஸ் வரியை தொடர்ந்து படிப்படியாக உயர்த்தினார்.
 
ஓராண்டில் டீசல் விலை 23 சதவீதம் உயர்த்தபட்டது. அடுத்த ஆண்டு முதல் மேலும் உயர்த்தப்படும் என அரசு அறிவித்தது. பிரான்ஸில் டீசல் கார்கள் அதிகம் என்பதால், இதற்கு நடுத்தர வர்க்க மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசின் இந்த நடவடிக்கை தொழிலதிபர்களுக்குத்தான் உதவும் என மக்கள் கருதினர்.
 
இதன் காரணமாகவே அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக மக்கள் கடந்த மாதம் 17ம் தேதி போராட்டத்தில் குதித்தனர். சாலைகள், பெட்ரோல் பங்குகள், வணிக வளாகங்களில் மக்கள் ஒன்று கூடி பிரான்ஸ் அரசுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
அரசுக்கு எதிரான கருத்துக்கள் சமூக வலை தளங்களில் பரப்பப்பட்டது. இதனால் இந்த போராட்டம் நடுத்தர மக்கள், விவசாயிகள், மாணவர்கள் ஆகியோரிடம் தூண்டுதலை ஏற்படுத்தியது.
 
இந்த போராட்டத்தில் மஞ்சள் நிறத்தில் ஒளிரும் பாதுகாப்பு ஜாக்கெட் அணிந்து போராட்டக்காரர்கள் கலந்து கொண்டனர். பிரான்சின் பல பகுதிகளில் 3 லட்சம் பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். தலைநகர் பாரீசில் 8 லட்சம்  பேர் கலந்து கொண்டனர்.
 
கடந்த வார இறுதியில் இந்த போராட்டம் மிகவும் தீவிரமானது. போராட்டக்காரர்களின் கோரிக்கையை அரசு கண்டு கொள்ளவில்லை. இதனால் தலைநகர் பாரீஸ் உட்பட பல இடங்களில் போராட்டக்காரர்கள் கடந்த 2ம் தேதி வன்முறையில் இறங்கினர்.
 

போராட்டகாரர்களுக்கும் போலிஸ்க்கும் நடக்கும் மோதல்

கார்கள், வணிக வளாகங்களுக்கு தீ வைக்கப்பட்டது. மொத்தம் 190 இடங்களில் தீ வைக்கப்பட்டன. பல கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்டன. கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதில் 6 கட்டிடங்கள் எரிந்தன.
 
இது போன்ற பயங்கர வன்முறை பிரான்சில் கடந்த 1968ல் இருந்து நடைபெறவில்லை. கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் கலவர கும்பலை போலீசார் விரட்டினர். இந்த வன்முறையில் 23 வீரர்கள் உட்பட 100 பேர் காயம் அடைந்தனர்.
 
போராட்டத்தில் ஈடுபட்ட 400 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த கலவரத்தையடுத்து, அர்ஜென்டினாவில் நடந்த ஜி-20 மாநாட்டை பாதியில் முடித்துக் கொண்டு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் அவசரமாக நாடு திரும்பினார்.
 
பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பிரான்ஸில் அவசரநிலை பிரகடனம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றின் கட்டணத்தை அடுத்தாண்டு முதல் உயர்த்தும் திட்டத்தை ரத்து செய்வது உட்பட சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அதிபர் மெக்ரான் உறுதி அளித்துள்ளார்.
 
ஆனாலும், போராட்டக்காரர்கள் திருப்தியடையவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.
 
வன்முறை ஓரளவு கட்டுபடுத்தப்பட்ட நிலையில், பிரான்ஸில் பள்ளி மாணவர்கள் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்திலும் குப்பை தொட்டிக்கு தீ வைக்கப்பட்டது.
 
இதிலும் பலர் கைது செய்யப்பட்டனர். போலீசார் மீது தாக்குதல் நடத்தும்படியும், அதிபர் மாளிகை நோக்கி பேரணி செல்லும்படியும் சமூக வலைதளங்களில் தகவல் பரப்பப்பட்டது.
 
நேற்று வார இறுதி நாள் என்பதால் மீண்டும் போராட்டக்காரர்கள் பெரியளவில் வன்முறையில் இறங்கலாம் என கருதி பிரான்ஸ் முழுவதும் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பாரிசில் 8 ஆயிரம் போலீசாரும், நாடு முழுவதம் 89 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
 
கடைகள், மியூசியங்கள், மெட்ரோ நிலையங்கள், ஈபிள் கோபுர சுற்றுலா ஆகியவை மூடப்பட்டன. கால்பந்தாட்ட போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. போராட்டக்காரர்கள் 300 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். போராட்டக்குழுவை சேர்ந்த சிலரிடம் பிரதமர் பிலப்பி நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்தார். போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை அதிபரிடம் தெரிவிப்பதாக உறுதி அளித்தார்.