பிசிசிஐயில் சிபாரிசு இல்லையென்றால் இந்திய அணியின் கேப்டனாக முடியாது என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ள கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங், சமீபத்தில் அனைத்து வடிவ கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார். 1998- 2016 ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடியுள்ள ஹர்பஜன் சிங், 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 417 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அண்மையில் தான் இவரது விக்கெட் சாதனையை முறியடித்தார் அஷ்வின். மேலும் 236 ஒருநாள் போட்டிகளில் ஆடி 269 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள ஹர்பஜன் சிங், 28 டி20 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடைசியாக 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ஹர்பஜன் சிங் விளையாடினார்.

அதன்பின்னர் 5 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத நிலையில், அண்மையில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார். 400 விக்கெட்களுக்கும் மேல் வீழ்த்தி சாதனை படைத்த ஹர்பஜன் சிங்கிற்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்காதது ஏன் என்ற வருத்தம் உள்ளது.

இதனைத்தொடர்ந்து சமீபத்தில் தோனி மீது குற்றம் சாட்டிய ஹர்பஜன் சிங், தான் அணியிலிருந்து நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து தன்னிடம் தெரியப்படுத்தப்படவேயில்லை என்றும், இதுதொடர்பாக தோனியிடம் பலமுறை கேட்டும் பதில் கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது பிசிசிஐ மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதுகுறித்து ஹர்பஜன் சிங் கூறுகையில், “2012 ஆம் ஆண்டுக்கு பிறகு சில தவறுகள் நடந்துள்ளது என்று தான் கூறுகிறேன். 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற அணி மீண்டும் ஒருமுறை கூட சேர்ந்து விளையாடவில்லை.

பிசிசிஐ தான் எங்களை ஒன்று சேரவிடவில்லை. பிசிசிஐ மீது தான் எனக்கு கோபம். என்னைப் பொறுத்தவரை பிசிசிஐ, ஒரு அரசாங்கம் போல் நடந்துக் கொள்கிறது. தேர்வுக்குழு அதிகாரிகள் அந்த சமயத்தில், நியாயமாக நடந்துக் கொள்ளவில்லை. மிகச்சிறந்த வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஃபார்மில் இருந்த போதும் ஏன் புது வீரர்களை கொண்டு வர வேண்டும்.

இதுகுறித்து நான் நேரடியாக பல முறை கேட்டுவிட்டேன். ஆனால் தேர்வுக்குழு எங்கள் கையில் ஒன்றும் இல்லை எனக்கூறினர். இப்படி பதில் கூறுவதற்கு அவர்கள் ஏன் தேர்வுக்குழு அதிகாரிகள் என்ற பதவியில் இருக்கிறார்கள்..” என ஹர்பஜன் சிங் சரமாரியாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், இந்திய அணியின் கேப்டனாக இருந்து அணியை வழிநடத்த வாய்ப்பு கிடைக்காதது குறித்த வருத்தம் இருக்கிறதா என்ற கேள்விக்கு, ஹர்பஜன் சிங் அளித்த பதில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன்சி குறித்து பேசிய ஹர்பஜன் சிங், “இந்திய அணியின் கேப்டனாக செயல்படுவதும் பெரிய சாதனை தான். ஆனால் நான் கேப்டனாக நியமிக்கப்பட, எனக்கு பிசிசிஐயில் யாரும் நெருங்கியவர்கள் கிடையாது. இந்திய அணியின் கேப்டனாக வேண்டுமென்றால் பிசிசிஐயில் அதிகாரத்தில் இருப்பவர்களை யாரையாவது தெரிந்துவைத்திருக்க வேண்டும். சிபாரிசு இருந்தால் தான் இந்திய அணியின் கேப்டனாக முடியும்” என்று தெரிவித்துள்ளார். ஹர்பஜன் சிங்கின் இந்த கருத்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.