‘தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்’ என்ற சிறுகதைத் தொகுப்பின் மூலம் தமிழ் எழுத்துலகில் கவனம் ஈர்த்தவர் எழுத்தாளர் மாரி செல்வராஜ். இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த இவர், எழுதி இயக்கியுள்ள படம் பரியேறும் பெருமாள்.

கதிர், ஆனந்தி, யோகிபாபு உட்பட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள இப்படத்தை இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்துள்ளார்.

சாதிய கொடுமைகளுக்கு எதிரான இந்தப் படத்தை பார்த்த, பொதுமக்களும், திரையுலகப் பிரமுகர்கள் பலரும் இயக்குனர் மாரி செல்வராஜை வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். இதனால் இப்படத்திற்கு நிறைய விளம்பரங்கள் கிடைத்துள்ளன.

பரியேறும் பெருமாள் படத்தை பார்த்த நடிகர் விஜய், இயக்குநர் மாரி செல்வராஜை பாராட்டியதுடன் அவரிடம் நிறைய பேச வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் விஜய், எங்க பார்த்தாலும் உங்க பட பேச்சா தான் இருக்கு என கதிருக்கு நேரடியாக போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் படம் பார்த்துவிட்டு தயாரிப்பாளர் பா. இரஞ்சித்தையும், மாரிசெல்வராஜையும் வெகுவாக பாராட்டிய ஸ்டாலின், “கலைஞர் பார்த்திருந்தால் பரியனை வெகுவாகப் பாராட்டியிருப்பார். சில வருடங்களில் நான் பார்த்த சிறந்த படம் இது. திரைப்படக் குழுவினருக்கு என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நடிகர் சிவகுமார், படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். மேலும் மாரி செல்வராஜிடம், “சமூகத்துக்கு அவசியமான படம். ஒவ்வொருவரின் மனதிலும் உட்கார்ந்து உரையாடலை நிகழ்த்தி விட்டீர்கள். சில காட்சிகளில் கலங்கவைத்து விட்டீர்கள்” என்று பாராட்டி, தான் வரைந்த ஓவியப் புத்தகம் ஒன்றை பரிசாக அளித்தார்.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், பரியேரறும் பெருமாள் படத்தின் தயாரிப்பாளர் பா.ரஞ்ஜித் மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் ஆகியோரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படம் குறித்து பதிவிட்டுள்ள நடிகர் கமல்ஹாசன், “மக்கள் மனமேறி அமர்ந்துவிட்ட பரியேறும் பெருமாளுக்கு என் வாழ்த்துக்கள். நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் பாராட்டுக்கள். உங்களின் சிறப்பான பணி தொடரட்டும்” என கூறியுள்ளார்.

இந்நிலையில், “பரியேறும் பெருமாள் என்னை எங்கு கூட்டி செல்கிறது என்பதை அறிய ஆசையாக இருக்கிறேன். தனது அடுத்தப்படமும் உண்மை கதையை அடிப்படையாக கொண்டதாக தான் இருக்கும்” என பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.