பாஜக அருணாச்சல பிரதேச முதல்வருடன் கட்சியினர் வந்த காரில் இருந்து ரூ.1.8 கோடியை தேர்தல் பறக்கும் படை பறிமுதல் செய்தது அதிர்வலைகளை ஏற்படுத்திள்ளது
 
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் தேர்த்தி அறிவிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.
 
அதன்படி, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் பாசிகாட் நகரில் நேற்று இரவு முதலமைச்சர் பீமா காண்டு, துணை முதல்வர் சாவ்னா மெயின் மற்றும் பாஜக மாநில தலைவர் தபீர் காவ் ஆகியோர் சென்ற போது, அவர்களுடன் வந்த வாகன அணிவகுப்பை நிறுத்தி அதிகாரிகள் சோதனை செய்தனர்.
 
அப்போது காரில் இருந்த ரூ.1.8 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 
வடகிழக்கு மாநிலங்களில் வாக்காளர்களை ஈர்ப்பதற்காக பாஜக பண பலத்தைப் பயன்படுத்துகிறது என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
 
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடி பாசிகாட் நகரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் இன்று காலை உரையாற்றினார்.
 
இதற்கு சில மணி நேரத்திற்கு முன்னதாக, பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்தப் பணம் மோடியின் பொதுக்கூட்டத்திற்காக கொண்டு செல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது என்று கூறினார்.
 
மேலும் இவ்வளவு தொகை எங்கிருந்து வந்தது? என்றும், தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரதமர் மோடி, அருணாச்சல முதல்வர் பீமா காண்டு, துணை முதல்வர் சாவ்னா மெயின் ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று கூறினார்.
 
இதையடுத்து, முதல்வர் மற்றும் துணை முதல்வரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், பாஜக தலைவர் தபீர் காவ் அருணாச்சல் மேற்கு மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.