ஒகேனக்கல், காவிரி, ஆறு, வெள்ளப்பெருக்கு, நீர்வரத்து, கனஅடி, தமிழ்நாடு

கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதாலும், கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை மிக தீவிரமடைந்ததாலும்,கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் ஆகிய அணைகள் வேகமாக நிரம்பி வருவதால், ,அணைகளின் பாதுகாப்புக் கருதி, காவிரி ஆற்றில் 1.16 லட்சம் கன அடி உபரி நீர் திறந்துவிடபட்டது.

கர்நாடக அணைகளில் இருந்து திறந்த விடப்பட்ட தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வெள்ளிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் ஒகேனக்கல்லுக்கு வந்தடைந்தது.

வெள்ளிக்கிழமை காலை 9 மணி நிலவரப்படி நொடிக்கு 60 ஆயிரம் கன அடியாகவும், 12 மணி நிலவரப்படி 80ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது. மேலும், 3.00 மணி நிலவரப்படி தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்து, மாலை 6 மணிக்கு 1.10 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரிஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து கொண்டே வருவதால், பிரதான அருவி செல்லும் நடைபாதை, பிரதானஅருவி, சினி அருவி, ஜந்தருவி ஆகிய பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் காவிரி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு,வருவாய்த் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் மூலம் தொடர்ந்து வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ,பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 60 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று நாள்களாக கர்நாடக மாநிலம் மற்றும் கேரள மாநிலத்தின் வயநாடு பகுதியிலும் கன மழை பெய்து வருவதால் கர்நாடகத்தின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளிலிருந்து அதிக அளவில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த உபரி நீர் வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியது.

இதன் காரணமாக வியாழக்கிழமை காலை நொடிக்கு 8,311 கனஅடியாக இருந்த அணையின் நீர்வரத்து வெள்ளிக்கிழமை காலை நொடிக்கு 16,969 கன அடியாகவும், மாலையில் 60 ஆயிரம் கன அடியாகவும் அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை காலை 116.85 அடியாகவும், நீர் இருப்பு 88.53 டி.எம்.சி.யாகவும் இருந்தது.

அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காகவும், உபரி நீராகவும் நொடிக்கு 40 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர் மின் நிலையங்கள் வழியாக நொடிக்கு 22,500 கனஅடி நீர் போக மீதம் உள்ள தண்ணீர் மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி வழியாகத் திறக்கப்படுவதால், உபரி நீர் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனைக் காண ஆயிரக்கணக்கானோர் கூடியதால், உபரிநீர் போக்கி பகுதி சுற்றுலாத் தலம் போல காணப்படுகிறது. ஆனால் வெள்ளபெருக்கு காரணாம ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளிக்கவும் , பரிசல் சவாரி செய்யவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகள் காவிரி கரையோர பகுதிகளில் குளிக்காமல் இருக்க போலீஸார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கர்நாடக அணைகளிலிருந்து, காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட தண்ணீரின் அளவை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.