நாகாலாந்தில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை 30.12.2021 முதல் மேலும் 6 மாத காலம் நீட்டித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதற்கு பல்வேறு அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில், தனிநாடு கோரிக்கையை முன்வைத்து போராடிவரும் நாகா படையினருக்கும், இந்திய அரசுக்கும் இடையே நீண்ட ஆண்டுகளாக மோதல் நீடித்துவருகிறது. இதனால் கடந்த 1958 ஆம் ஆண்டு முதல் நாகாலாந்து பகுதியில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் (AFSPA) அமலில் உள்ளது.

இச்சட்டத்தின் மூலம் நாகலாந்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அதிகாரம் ராணுவத்திடம் இருக்கும். அப்பகுதியில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடினால் கைது செய்ய முடியும். வாரன்ட் இன்றி யாரையும் கைது செய்ய முடியும். அனுமதியின்றி சோதனை நடத்த முடியும். துப்பாக்கிச்சூடு நடத்த முடியும். இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு கட்சிகள், அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஆகஸ்ட் 3, 2015 அன்று ஒன்றிய அரசு மற்றும் நாகா கிளர்ச்சிக் குழுவின் என்.எஸ்.சி.என்-ஐ.எம் பொதுச் செயலாளர் துங்கலெங் முய்வா ஆகியோருக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆனால் அதன் பின்னரும் இச்சட்டம் இதுவரை திரும்பப் பெறப்படவில்லை.

இந்நிலையில் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி நாகாலாந்தின் மோன் மாவட்ட பகுதியில் தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின்பேரில் கூலித் தொழிலாளர்கள் வந்த வாகனத்தின் மீது ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதைக் கண்டித்து ராணுவ முகாம்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தியதில் ஒரு வீரர் உயிரிழந்தார்.

நாகாலாந்து முழுவதும் சில நாட்கள் கலவரம் நீடித்தது. சர்ச்சைக்குரிய ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று முதல்வர் நெபியு ரியோ உட்பட அனைத்து தரப்பு மக்களும் ஒருமித்த குரலில் வலியுறுத்தி வருகின்றனர். சட்டத்தை வாபஸ் பெறக்கோரி நாகாலாந்து சட்டப் பேரவையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் நாகாலாந்தில் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நேற்றுடன் காலாவதியானது. இதனைத்தொடர்ந்து இந்த சட்டத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று (30.12.2021) அரசாணை வெளியிட்டுள்ளது.

அதில், 1958 ஆம் ஆண்டின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தின் பிரிவு 3ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, நாகாலாந்து மாநிலம் முழுவதும் ‘குழப்பமான, ஆபத்தான சூழ்நிலை நிறைந்த பகுதி’ என்று ஒன்றிய அரசு அறிவித்து 2021 டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை மேலும் 6 மாத காலத்திற்கு நீடிப்பதாக குறிப்பிட்டுள்ளது..

இதுகுறித்து ஒன்றிய அரசு தரப்பில் கூறும்போது, “நாகாலாந்து பாதுகாப்பு தொடர்பாக கடந்த 23 ஆம் தேதி ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் நாகாலாந்து முதல்வர் நெபியு ரியோ உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

இதில் மாநிலத்தின் பாதுகாப்பு நிலவரம் குறித்து முழுமையாக ஆலோசிக்கப்பட்டது. சட்டத்தை திரும்ப பெறுவது குறித்த சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஒன்றிய உள்துறை கூடுதல் செயலாளர் தலைமையில் சிறப்புக் குழுவை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.

நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டித்துள்ளன. இதுதொடர்பாக நாகா பழங்குடியின அமைப்பான நாகா ஹோஹோவின் பொதுச்செயலாளர் எலு டாங் கூறும்போது, “நாகாலாந்து மக்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இந்த சட்டத்தை பயன்படுத்தி அப்பாவிகள் படுகொலை செய்யப்படுகின்றனர். சர்ச்சைக்குரிய சட்டத்தை ரத்து செய்யக் கோரி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்” என்றார்.