நடிகா் விஜயகுமாருக்கு சொந்தமான வீடு மதுரவாயல் ஆலப்பாக்கம் பகுதியில் உள்ளது. இந்த வீட்டினை சினிமா படப்பிடிப்பிற்காக வாடகைக்கு விட்டு வந்தார். இவரது மூத்த மகள் நடிகை வனிதா புதிய படம் ஒன்றை தயாரித்து வருகிறார். இதற்காக படப்பிடிப்பு நடத்தப் போவதாக அந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளாா். ஆனால், தனக்கு வழங்கப்பட்ட காலம் முடிவடைந்த பின்னரும் வனிதா அதே வீட்டில் இருந்துள்ளாா்.
இதனையடுத்து விஜயகுமார், வனிதா மீது மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக வனிதாவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது அவர் வீட்டில் எனக்கும் பங்கு உள்ளது என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உதவி கமிஷனர் ஜான்சுந்தர், இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் ஆகியோர் விசாரணை நடத்தினர். வனிதாவிடம் வீடு தொடர்பான ஆவணங்களை கொடுக்கும்படி தெரிவித்தனர். ஆனால் அவர் போலீசாரிடம் எந்த ஆவணத்தையும் கொடுக்கவில்லை.
இதற்கிடையே நடிகை வனிதா, ஆலப்பாக்கம் வீட்டுக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர்களிடம் மோதலில் ஈடுபட்டார். அவதூறாகவும் பேசினார்.
இதையடுத்து வியாழக்கிழமை அன்று போலீசார் அதிரடியாக சர்ச்சைக்குரிய வீட்டுக்குள் இருந்த நடிகை வனிதாவை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். மேலும் வீட்டில் அத்துமீறி தங்கியிருந்த கோடம்பாக்கம் பகுதியை சேர்ந்த நரேந்திரன், ஆண்ட்ரூஸ், வடபழனியை சேர்ந்த ஜோசப் மனோஜ், திருவேங்காடு பாலா, சைதாப்பேட்டை சத்திய சீலன், நெற்குன்றம் தியாகராஜன், காஞ்சீபுரம் மணிவர்மா ஆகிய 7 பேரை கைது செய்தனர்.
அனைவரையும் வெளியேற்றிய பின்னர் வீட்டை பூட்டி, அதன் சாவியை நடிகர் விஜயகுமாரிடம் ஒப்படைத்தனர். வனிதா மீது கொலை மிரட்டல், அத்துமீறி நுழைந்து வீட்டை சேதப்படுத்தியது உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து வனிதா செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது, நான் இந்த வீட்டை விட்டு எங்கே போவேன்? நடு ரோட்டில் நிற்கிறேன். என் வீட்டில் தான் என்னுடைய மருந்துகள் உள்ளன. எனக்கும் வயதாகி விட்டது. அடித்து என் சொந்த வீட்டிலிருந்தே வெளியே துரத்துகின்றனா். நடிகா் என்றால் செலா்வாக்கை பயன்படுத்தி எவரை வேண்டுமானாலும் வீட்டில் இருந்து வெளியே துரத்தலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.
நடிகை வனிதா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், தனது குடும்ப விவகாரம் தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அப்போது அவர் தனது குடும்பத்தினர் மீதும் குற்றச்சாட்டுகளை கூறினார். இந்த நிலையில் சொத்து தகராறு தொடர்பாக விஜயகுமாருக்கும், வனிதாவுக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.