விஜயவாடாவில் உள்ள இந்திரா காந்தி நகராட்சி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆந்திர மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக சாகரி பிரவின் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் இஎஸ்எஸ். நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
 
இதை தொடர்ந்து ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு தனித்தனி உயர்நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டு இன்று முதல் அவை செயல்படத் துவங்கியுள்ளன.
 
இந்த நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் தனித்தனி இடங்களில் பொறுப்பேற்றுக் கொண்டனர். ஆந்திரா மாநிலத்துக்குத் தனியாக உயர் நீதிமன்ற கட்டிடம் அமராவதியில் கட்டப்பட்டு முடிக்கும் நிலையில் இருக்கிறது.
 
அந்தப் பணிகள் முடியும் வரை உயர் நீதிமன்றம் விஜயவாடாவில் தற்காலிகமாகச் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விஜயவாடாவில் உள்ள தற்காலிக உயர் நீதிமன்ற கட்டிடத்தை நீதிபதி ரமணா திறந்துவைத்தார். அதே போல ஐதராபாத் ராஜ்பவனில் நடந்த நிகழ்ச்சியில் தெலங்கானா மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக டி பாஸ்கரன் நாயர் ராதாகிருஷ்ணன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
 
அவருக்கு ஆளுநர் நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். தலைமை நீதிபதி உடன் 12 நீதிபதிகள் பதவியேற்றுக் கொண்டனர்.
 
முன்னதாக ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா பிரிக்கப்பட்டு நான்கரை ஆண்டுகளாக இரு மாநிலங்களுக்கும் தனித்தனியாகி உயர் நீதிமன்றங்கள் இல்லாமல் இருந்து வந்தது. இது தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் தனித்தனி நீதிமன்றங்கள் கேட்டு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
 
இதை தொடர்ந்து ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு தனித்தனி உயர் நீதிமன்றங்கள் அமைக்கப்படுவதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் கடந்த வாரம் வெளியிட்டார்.
 
இதன்படி ஆந்திர மாநிலத்துக்கென தனி உயர் நீதிமன்றம் தலைநகர் அமராவதியிலும், தெலங்கானா மாநிலத்துக்கென தனி உயர் நீதிமன்றம் ஹைதராபாத்திலும் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.