அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதல் முறையாக அமீரகத்துக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று முன்தினம் இரவு ராகுல் காந்தி துபாய் சென்றார்.
 
துபாய் சர்வதேச விமான நிலையத்தில் அவரை வரவேற்க பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இந்தியர்கள் ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர்.
 
அவர்கள் ராகுல் காந்தியை வரவேற்கும் விதமாக பதாகைகளை கையில் ஏந்தியபடி நின்றனர்.
 
ராகுல் காந்தி வெள்ளை நிற சட்டை, நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்து மேலே கருப்பு நிற கோட் அணிந்து எளிமையாக இருந்தார். இந்தியர்களை பார்த்ததும் சிரித்தபடியே கையசைத்தார். அவரை பார்த்ததும் கூடியிருந்தவர்கள் மகிழ்ச்சியில் ‘ராகுல், ராகுல்’ என உற்சாகமாக குரல் எழுப்பினார்கள்.
 
விமான நிலையத்தில் துபாய் அரசு சார்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மக்கள் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் போலீசார் திணறினர்.
 
ராகுல் காந்தியை கேரள முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி வரவேற்று உரையாடினார். தொடர்ந்து ராகுல்காந்தி துபாயில் உள்ள ஓட்டலில் இரவு தங்கினார்.
 
நேற்று காலை 10.45 மணிக்கு துபாயில் ஒரு ஓட்டலில் இந்திய தொழில் அதிபர்களை ராகுல்காந்தி சந்தித்து பேசினார். அமீரகத்துக்கான இந்திய தூதர் நவ்தீப்சிங் சூரி மற்றும் இந்திய தொழில் அதிபர்கள் பலர் கலந்துகொண்டனர்.
 
இந்த சந்திப்பு கூட்டம் முடிந்ததும் துபாய் ஜெபல் அலி தொழிற்பேட்டை அருகில் உள்ள தொழிலாளர் முகாமுக்கு ராகுல்காந்தி சென்றார். அங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ராகுலை காண காத்திருந்தனர். அந்த முகாமில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் இருந்தபடி ராகுல்காந்தி பேசிய விவரம் வருமாறு:
 
இந்தியாவில் காங்கிரஸ் அரசு அமையும். அதிகாரம் நமது கையில் வந்ததும் முதல் வேலையாக ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் இன்று துபாயை உலகத்தின் சிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றும் முயற்சிகளில் பங்கெடுத்துள்ளர்கள்.
 
இங்கு பாருங்கள் உயரமான கட்டிடங்கள், மிகப்பெரிய விமான நிலையம், மெட்ரோ ரெயில் சேவை. இதெல்லாம் நீங்கள் இல்லாமல் வந்திருக்குமா?. இந்த நாட்டின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் இந்தியர்கள் பின்புலத்தில் உள்ளனர். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
 
அப்போது தொழிலாளர்கள் பலத்த கரவொலி எழுப்பி ஆரவாரம் செய்தனர். பிறகு தொழிலாளர்கள் வசிக்கும் அறைகளுக்கு சென்று ராகுல் காந்தி பார்வையிட்டார். இந்திய தொழிலாளர்களை சந்தித்து அவர்களிடம் நலம் விசாரித்து, குறைகளை கேட்டறிந்தார்.
 
அவர் அங்கிருந்து புறப்பட்டு செல்லும்போது, அவருடன் கைகுலுக்கி மகிழ்ச்சி தெரிவித்தனர். போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி அவர்களை கட்டுப்படுத்தினர்.
 
பின்னர் மாலை 3 மணிக்கு பஞ்சாப் சமூக அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு ராகுல் காந்தி சென்றார். அங்கு நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.
 
தொடர்ந்து இரவு 7 மணிக்கு துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று இந்திய மக்களிடையே உரையாற்றினார்.
 
அப்போது ‘காந்தி 150 ஆண்டுகள் மற்றும் இந்தியாவின் கருத்துகள்’ என்ற தலைப்பில் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் உரையாற்றினார்.
 
ராகுல் காந்தியின் பேச்சை கேட்க 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் கிரிக்கெட் மைதானத்தில் கூடி இருந்தனர். இது வரை இந்திய தலைவர்கள் யாருக்கும் வராத கூட்டம் இது என் அங்குள்ள பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன .
 
துபாய் ஜபீல் அரண்மனையில் அமீரக துணை அதிபரும், துபாய் ஆட்சியாளருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூமை ராகுல்காந்தி சந்தித்து பேசினார்.
 
அப்போது 21-ம் நூற்றாண்டின் வளர்ச்சி திட்டங்களில் இரு நாட்டு உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனை நடத்தினார்கள்.