தீபஒளித் திருநாளன்று தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இறைச்சிக் கடைகள் திறக்க அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “இந்த ஆண்டு வரும் 04.11.2021 அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ள அதே நாளில் மகாவீரர் ஜெயந்தி நாளும் வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மகாவீரர் ஜெயந்தி நாளன்று இறைச்சிக் கடைகள் மூடப் படக்கூடிய நடைமுறை தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வரும் சூழலில், பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளிடமிருந்து வந்த கோரிக்கைகளைப் பரிசீலித்து தீபாவளி நாளன்று தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இறைச்சிக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

அதேவேளையில் ஜெயின் மதத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளிலுள்ள இறைச்சிக் கடைகளும், ஜெயின் மத வழிபாட்டு தலங்களைச் சுற்றியுள்ள இறைச்சிக் கடைகளும் மூடப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மகாவீர் நிர்வான் (மகாவீரர் ஜெயந்தி) என்ற ஜெயின் மத பண்டிகையை ஒட்டி நவம்பர் 4 ஆம் தேதி இறைச்சிக் கடைகள் மூடப்படும் என சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பெரும்பாலானோர் தீபஒளித் திருநாளறு தான் அதிகளவில் இறைச்சி எடுப்பார்கள் என்பதால் இந்த உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என பொதுமக்கள், இறைச்சிக்கடை உரிமையாளர்கள் அனைவரும் அரசிடம் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்தும் தமிழ்நாடு அரசு இறைச்சிக் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.

https://www.facebook.com/savenra/posts/7270603452965515