திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தொகுதி தேர்தல் வழக்கை டாக்டர் சரவணன்(திமுக) வாபஸ் பெற்றுள்ளார்.
 
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு 18-ம் தேதியே இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
திருப்பரங்குன்றம் தொகுதி மக்களின் நலன் கருதி, இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில் திருப்பரங்குன்றத்தில் இடைத்தேர்தல் நடத்த நீதிமன்றம் தடை ஏதும் விதிக்கவில்லை என்றும், இடைத்தேர்தல் கூடாது என்று தேர்தல் வழக்கில் தாமும் கோரவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.
 
வழக்கு நிலுவையில் இருந்தால் இடைத்தேர்தல் கூடாது என்பது சட்டமல்ல என்றும், திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற ஏ.கே.போஸ் காலமாகிவிட்டார் என்றும் அந்த கடிதத்தில் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.
 
தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 19ம் தேதி தொடங்குகிறது.
 
நாடு முழுவதும் உள்ள 543 தொகுதிகளுக்கும் 7 கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, மே 23ம் தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
 
தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டசபைத் தொகுதிகளில் ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
 
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, அந்த 3 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறாது. இதனால் 18 சட்டசபை தொகுதிகளுக்கு மட்டுமே இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
 
இப்போது திமுகவின் வேட்பாளர் வழக்கை வாபஸ் பெற்றதால் திருப்பரங்குன்றம் இடைதேர்தல் நடக்க கூடிய வாய்ப்புகள் அதிகம் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்து உள்ளனர்.