சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கைகளை கொச்சைப் படுத்தி நடித்த விஜய் சேதுபதி கைது செய்யப்பட வேண்டும் என திருநங்கைகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தேசிய விருது பெற்ற ஆரண்ய காண்டம் திரைப்படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா, 8 ஆண்டுகளுக்கு பின் இயக்கியுள்ள திரைப்படம் சூப்பர் டீலக்ஸ்.

இப்படத்தில் திருநங்கையாக நடித்துள்ள விஜய் சேதுபதி நடித்த புடவை உடுத்தி வீட்டுக்குச் செல்வது, குழந்தைகளை கடத்துவது போன்ற குற்றச்செயல்கள் கொண்ட காட்சி அமைப்புகள் திருநங்கைகளின் மனதை புண்படுத்துவதாக மிருணாலினி, கோவை சில்கி பிரேமா, கல்கி சுப்ரமணியம் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதில் திருநங்கை ரேவதி என்பவர் கூறியபோது, “விஜய் சேதுபதியாகிய உங்கள் மீது மக்கள் நிறைய மரியாதை வைத்திருக்கிறார்கள். உண்மையிலேயே திருநங்கைகள் குழந்தைகளை கடத்துபவர்களா. எப்போது மும்பையில் திருநங்கைகள் குழந்தைகளை கடத்தினார்கள். அதை நீங்கள் பார்த்தீர்களா? திருநங்கைகளின் மனதை கொச்சைப்படுத்திவிட்டீர்கள். கதையின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு ஏன் இந்தப் படத்தை புறக்கணிக்கவில்லை. ஒரு குழந்தை பெற்ற பின்பு அவர் திருநங்கையாக மாறியிருப்பது போன்று கதை அமைக்கப்பட்டிருப்பதும், மனைவியிடமே புடவை வாங்கி உடுத்துவதும் என்ன அடிப்படையில் கதை” என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.

மேலும், சூப்பர் டீலக்ஸ் படம் திருநங்கைகள் சமூகத்துக்கு அநீதி இழைத்துள்ளது. முழுக்க முட்டாள்தனமான, தவறான சித்தரிப்பாக விஜய் சேதுபதியின் ஷில்பா கதாபாத்திரம் அமைந்துள்ளது. இது வெட்கக்கேடானது அதேநேரத்தில் அதிர்ச்சிகரமானது. விஜய் சேதுபதியை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம், அவரை கைது செய்ய வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், உலகம் முழுவதும் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்திற்கு நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை ஒன்று விமர்சனம் கொடுத்துள்ளது. அதில் பெரும்பாலும், பாலிவுட் படங்களில் பாலியல் என்பது இன்னும் வெளிப்படையாக காட்டப்படாத நிலையில், பாலியல் என்பது உணர்வின் ஒரு பகுதியாக உள்ளது. தனித்துவமான சிறந்த படம் சூப்பர் டீலக்ஸ் என்று விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்படம் வெளியான அன்றே தமிழ்ராக்கர்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது படக்குழுவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.