திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா வீட்டில் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் 4 பேரை கட்சியில் இருந்து நீக்கி திமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
திருச்சி கண்டோன்மெண்ட் ஸ்டேட் பாங்க் ஆபீசர்ஸ் காலனியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட இறகுப்பந்து மைதானத்தை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்து வைத்தார். அப்போது திறப்பு விழா கல்வெட்டில் எம்.பி. திருச்சி சிவா பெயர் இடம் பெறவில்லை என அவரது ஆதரவாளர்கள் அமைச்சர் நேருவின் காரை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அமைச்சர் நேருவுக்கு எதிராக கருப்புக்கொடி காட்டினர். அதனால் கோபமடைந்த அமைச்சர் நேருவின் ஆதரவாளர்கள், திருச்சி சிவாவின் வீட்டுக்குள் புகுந்து கார், இருசக்கர வாகனம், மின்சார விளக்குகள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கினர்.
அங்கிருந்த சிவாவின் ஆதரவாளர்களும் தாக்கப்பட்ட நிலையில் அவர்களை காவல்துறையினர் அழைத்துச் சென்று செசன்ஸ் கோர்ட் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். ஆனால் அங்கும் நேருவின் ஆதரவாளர்கள் காவல் நிலையத்தில் உள்ளே புகுந்து அவர்களைக் கடுமையாகத் தாக்கினர். இந்த சம்பவத்திற்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக செசன்ஸ் கோர்ட் காவல் நிலைய காவல்துறையினர் இரு தரப்பிலும் அளித்த புகாரின் பேரில் 30 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மாமன்ற உறுப்பினருமான காஜாமலை விஜய், திமுக துணைச் செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான முத்துச்செல்வம்,
அந்தநல்லூர் ஒன்றிய தலைவரும், மாவட்ட பொருளாளருமான துரைராஜ், 55வது வட்ட செயலாளரும், மாமன்ற உறுப்பினருமான ராம்தாஸ் ஆகிய நான்கு பேரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கி திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று அறிவித்தார்.
இதனையடுத்து திமுக தலைமையின் உத்தரவுப்படி திருச்சி சிவா வீட்டை தாக்கியதாக காஜாமலை விஜய் உள்ளிட்ட நால்வரும் காவல்நிலையத்தில் சரண் அடைந்தனர். திருப்பதி என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவின்படி நேற்று இரவே சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் தன் வீடு தாக்கப்பட்ட சம்பவம் அறிந்து திமுக கொள்கை பரப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா கூறுகையில், ”நான் தனி நபர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவன். நாடாளுமன்றத்தில் இருந்து ஒரு குழு 178 நாடுகள் கலந்து கொண்ட மாநாட்டிற்காக பக்ரைன் சென்று இருந்தேன். என் வீட்டில் நடந்த தாக்குதல் குறித்த செய்திகளை நான் ஊடகங்கள் வாயிலாகவும், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்து கொண்டேன்.
இப்போது நான் எதையும் பேசுகின்ற மனநிலையில் இல்லை, கடந்த காலத்திலும் இது போன்ற பல சோதனைகளையும் சந்தித்துள்ளேன். அதையெல்லாம் நான் பெரிது படுத்தியதில்லை. யாரிடமும் சென்று புகார் அளித்ததும் இல்லை. நான் அடிப்படையில் முழுமையான, அழுத்தமான திமுக கட்சிக்காரன். தனி மனிதனை விட இயக்கம் பெரிது, கட்சி பெரியது என்று எண்ணுகிறவன்.
இப்போது நடந்து இருக்கிற இந்த நிகழ்ச்சி மிகவும் மன வேதனையை ஏற்படுத்துகிறது. . நான் ஊரில் இல்லாதபோது என்னுடைய குடும்பத்தார் மிகவும் மன வேதனைக்கு ஆளாகி உள்ளனர். என் வீட்டில் பணியாற்றிய 65 வயது பெண்மணி மற்றும் எனது நண்பர்கள் வயது முதிர்ந்தவர்கள் எல்லாம் காயப்பட்டு உள்ளனர். நான் பேசுவதற்கு நிறைய உள்ளது. ஆனால் நான் இப்போது பேசக்கூடிய மன நிலையில் இல்லை.
மனச்சோர்வில் உள்ளேன். மனச்சோர்வு என்கிற வார்த்தையை நான் இதுவரை பயன்படுத்தியதில்லை. இந்த தாக்குதல் சம்பவம் எனக்கு பெரும் வேதனையைத் தந்துள்ளது. பிறகு முழு விவரத்துடன் உங்களை சந்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.