2018-ம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது திமுக எம்.பி. கனிமொழிக்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு வழங்குகிறார்.
 
பிரபல செய்தி நிறுவனமான லோக் மட் செய்தி நிறுவனம் சார்பில், நாடாளுமன்ற விருதுகள் 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் வழங்கப்பட உள்ளது. வரும் 13-ம் தேதி மாலை 6 மணிக்கு டெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெறும் விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு இந்த விருதுகளை வழங்க உள்ளார்.
 
‘நாடாளுமன்றத்தில் கடந்த பத்தாண்டுகளாக கனிமொழி மகத்தான பங்காற்றியுள்ளார். ஜனநாயகத்தின் மதிப்பீடுகள், கொள்கைகளுக்கு வலு சேர்த்துள்ளார். எனவே மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழிக்கு 2018-ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற சிறந்த பெண் உறுப்பினருக்கான விருது வழங்கப்பட உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கனிமொழியின் நாடாளுமன்ற செயல்பாடுகள் மற்றவர்களுக்கு ஊக்கமாகவும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்கான உந்து சக்தியாகவும் திகழ்வதாக தெரிவித்துள்ளது.
 
இந்த விருதுகளை 10 பேர் கொண்ட மூத்த நாடாளுமன்ற குழு தேர்ந்தெடுத்திருக்கிறது. டாக்டர் முரளி மனோகர் ஜோஷியை தலைவராகக் கொண்ட இந்த குழுவில், டாக்டர் பரூக் அப்துல்லா, பேராசிரியர் சவுகதா ராய், பிரபுல் பட்டேல், டி ராஜா, டாக்டர் சுபாஷ் காஷ்யப், ஹெச்.கே. துவா, ராஜத் சர்மா, ஹரிஷ் குப்தா மற்றும் லோக் மால்ட் நிறுவனத்தின் தலைவரான விஜய் தர்தா ஆகிய மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
 
விருது வென்றுள்ள மாநிலங்களவை திமுக எம்.பி. கனிமொழிக்கு திமுகவினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
2018-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினர் விருதுபெறும் திருமதி @KanimozhiDMK அவர்களுக்கு இதயம் நிறைந்த வாழ்த்துகள். கழக MP-க்கள் அனைவரும் ஜனநாயக கடமையில் சிறப்பாக செயல்படுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த விருது.
 
அவர் மென்மேலும் பல விருதுகள் பெற வாழ்த்துகிறேன் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.