வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.வங்கக்கடலில் உருவான தித்லி புயல் வலுப்பெற்று தீவிர புயலாக மாறி ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்திற்கும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கும் இடையே வியாழக்கிழமை காலை கரையை கடந்தது. இதன் காரணமாக வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசாவில் கனமழை பெய்தது. பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மரங்கள் வேரோடு சாய்ந்தது. விவசாய பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஒடிசாவில் 60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என அம்மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயலை அடுத்து பெய்த கனமழை காரணமாக ஒடிசாவின் கஞ்சம், கஜாபதி, ராயகாடா உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மூன்று நாட்களாக பெய்த கனமழை காரணமாக சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

60 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில் ஒடிசா மாநில அரசு தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு குழு, ஒடிசா மாநில சிறப்பு படைப்பிரிவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பாலசோர் மாவட்ட மக்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என மாநில அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் மற்றும் வெள்ளம் என இரட்டை இயற்கை பேரிடரை எதிர்க்கொண்டுள்ள மக்களை வெளியேற்றவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும் மாவட்ட நிர்வாகங்களுக்கும் ஒடிசா முதல்வர் நவின் பாட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.

நிவாரண முகாம்களில் உள்ள மக்களுக்கு உணவு உள்ளிட்ட வசதிகளை செய்துக்கொடுக்கவும், வெள்ளத்தினால் சேதம் அடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை சரிசெய்யவும் உத்தரவிட்டுள்ள நவீன் பாட்நாயக் நிலை குறித்து அவ்வப்போது வீடியோ கால் மூலம் ஆலோசனையை மேற்கொண்டு வருகிறார்.