தமிழக விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதை எல்லாம் கண்டு கொள்ளமால் தமிழகத்தில் மேலும் 244 சதுர கி.மீ. பரப்பில் கச்சா எண்ணெய் எடுக்க ஏலம் விட மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
முன்னதாக தமிழகம் உட்பட 14 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு மத்திய அரசு கடந்த 7-ம் தேதி இரண்டாம் கட்ட ஏலம் விடுவதாக அறிவித்தது. தளர்த்தப்பட்ட திறந்தவெளி அனுமதி திட்டத்தின் கீழ் நாட்டில் உள்ள 14 இடங்களில் 29,333 சதுர கி.மீ. நிலத்தை மத்திய அரசு ஏலம் விடவுள்ளது.
 
இதற்கேற்ப முன்னர் கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, நிலக்கரி படுகை மீத்தேன், ஷேல் ஆயில், ஷேல் கேஸ் ஷேல் ஆயில் உள்ளிட்ட ஹைட்ரோகார்பன்களை எடுக்க தனித்தனி உரிமங்கள் பெறப்பட வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன.
 
எல்லா வித ஹைட்ரோகார்பன்களையும் எடுக்கலாம் என்று தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
 
இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக விவசாயிகள் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் இன்று விடப்பட இருக்கும் ஏலத்தில் தமிழகத்தில் நாகை மாவட்டத்தில் காவிரி படுக்கையில் உள்ள 474 சதுர கி.மீ. நிலமும் அடங்கும்.
 
இதனால் முக்கியத்துவம் வாய்ந்த காவிரி டெல்டாவின் நில வளம், நீர் வளம் பாதிக்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்த நிலையில், நாகை மாவட்டம் திருக்காரவாசல் தொடங்கி வேளாங்கண்ணி வரை எண்ணெய் எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் காரியாபட்டினத்தில் இருந்து புஷ்பவனம் வரையிலும் எண்ணெய் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
 
எண்ணெய் எடுக்க உரிமம் பெற ஒப்பந்த புள்ளிகளை அனுப்ப மார்ச் 12-ம் தேதி இறுதி நாள் என்றும் ஏற்கனவே அக்டொபரில் நடந்த ஏலம் மூலம் 55 வட்டாரங்களில் எண்ணெய் எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.