சட்டப்படியான, நிர்வாக ரீதியான எந்த உத்தரவும் இல்லை என நீதிமன்றம் கூறிய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பொது நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டபோது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் அமர்ந்திருந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. சங்கராச்சாரியார் விஜயேந்திரரின் இத்தகைய நடவடிக்கையை தமிழ் ஆர்வலர்கள் பலரும் கண்டித்தனர். ராமேஸ்வரம் காஞ்சி மடத்துக்குள் நுழைந்த தமிழ் ஆர்வலர்கள் சங்கராச்சாரியார் விஜயேந்திரருக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் பதிவு செய்த வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது உத்தரவில், “தமிழ்த்தாய் வாழ்த்து இறை வணக்க பாடல். தேசிய கீதம் அல்ல. தமிழ்த் தாய் வாழ்த்து பாடும்போது அனைவரும் எழுந்து நிற்க வேண்டும் என்று எந்த விதிகளும், எந்தவித சட்டப்படியான, நிர்வாக ரீதியான உத்தரவும் இல்லை.

பல்வேறு கலாச்சாரங்களை மதிக்கிற, கொண்டாடுகிற நாம் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு இப்படித்தான் மரியாதை செலுத்த வேண்டும் என்பது சரியல்ல. ஆன்மிகவாதிகள் பிராத்தனையின்போது தியான நிலையில் இருப்பார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து இறைவணக்கப் பாடல் என்பதால், அந்தப்பாடல் இசைக்கப்படும்போது ஆன்மிகவாதிகள் தியான நிலையில் இருப்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது தான்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் தியான நிலையில் கண்களை மூடிய நிலையில் இருந்துள்ளார். தாய் மொழி தமிழுக்கு அவர் அவரது வழியில் உரிய மரியாதை செலுத்தியுள்ளார்” எனத் தெரிவித்திருந்தார்.

நீதிபதியின் இத்தகைய தீர்ப்பு சர்ச்சையையும், விவாதங்களையும் ஏற்படுத்திய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுக்கு கட்டாயம் அனைவரும் எழுந்து நின்று, பாடவேண்டும் எனச் சட்டத்தின் வழி நின்று புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

எந்தவித சட்டப்படியான, நிர்வாக ரீதியான உத்தரவும் இல்லை என்று உயர் நீமன்றம் கூறிய நிலையில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசாணை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ள அரசாணையில். “மனோன்மணீயம் சுந்தரனார் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகளிலும் நிகழ்வு துவங்குவதற்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும் போது அனைவரும் தவறாமல் எழுந்து நிற்க வேண்டும்.

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாடப்படும் போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

பொது நிகழ்வுகளில் ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ இசை வட்டுக்களைக் கொண்டு இசைப்பதைத் தவிர்த்து பயிற்சி பெற்றவர்களால் வாய்ப்பாட்டாக பாடப்பட வேண்டும்.

அன்னைத் தமிழின் பெருமையை உலகறியச் செய்வதிலும், இளம்தலைமுறையினருக்குக் கொண்டு சேர்ப்பதிலும், பொதுமக்களும், தனியார் அமைப்புகளும் பெரும்பங்காற்ற முடியும் என்பதால், தமிழ்நாட்டில் தனியார் அமைப்புகள் நடத்திடும் கலை, இலக்கிய மற்றும் பொது நிகழ்வுகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படுவது ஊக்குவிக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.