டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள விராட் கோலி, இந்த தருணத்தில் தோனிக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்வதாக உணர்ச்சி பூர்வமாக பதிவிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகின்றது. இந்நிலையில் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கில் இந்திய அணி இழந்தது.

இந்திய அணி டெஸ்ட் தொடரை இழந்ததையடுத்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக இந்திய வீரர் விராட் கோலி ட்விட்டர் மூலம் அறிவித்துள்ளார்.

ஏற்கனவே டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி, தற்பொழுது டெஸ்ட் தொடருக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவதாக அறிவித்திருப்பது இந்திய கிரிக்கெட் உலகில் பேசு பொருளாகியுள்ளது.

இந்திய அணிக்கு இதுவரை 68 போட்டிகளில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள விராட் கோலி, 40 போட்டிகளில் வெற்றி, 17 போட்டிகளில் தோல்வி, 11 போட்டிகளில் டிரா கண்டுள்ளார். சொந்த மண்ணில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் வெற்றி கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள விராட் கோலி, “7 ஆண்டுகளாக கேப்டனாக என்னுடைய பணியை சிறப்பாக செய்தேன். அனைத்து நல்ல விஷயங்களுக்கும், ஒரு முடிவு இருப்பது போல், கேப்டன் பொறுப்பிலிருந்த தற்போது விலகுகிறேன்.

கேப்டனாக இருந்த இந்த பயணத்தில் பல ஏற்றம், இறக்கங்களை கண்டுள்ளேன். ஆனால் எப்போதும் என் தன்னம்பிக்கையை விட்டது இல்லை. இந்திய அணிக்காக 120 சதவீதம் என் முழு ஆற்றலுடன் வெற்றிக்காக உழைத்துள்ளேன்.

கேப்டனாக அங்கம் வகித்த இத்தனை ஆண்டுகள் எனக்கு வாய்ப்பு வழங்கிய பிசிசிஐ மற்றும் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரி, அணியின் மற்ற நிர்வாகிகள், ஆதரவு வழங்கிய வீரர்களுக்கும் நன்றி. முக்கியமாக என்னை நம்பி, இவ்வளவு பெரிய பொறுப்பை தோனி தான் எனக்கு வழங்கினார். ஆகையால், தோனிக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நன்றி. இந்திய அணிக்காக தொடர்ந்து சிறப்பாக விளையாடுவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.